நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்காகத் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட்) சிபிஎஸ்இ வாரியம் நடத்தி வந்தது. இந்தாண்டு இதற்காக தேசிய தேர்வு முகமை என்ற தனி அமைப்பு தொடங்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நீட் தேர்வு மற்றும் கூட்டு நுழைவுத் தேர்வு(ஜேஇஇ) ஆகியவை நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டிருந்தது. நீட் மற்றும் ஜேஇஇ தேர்வை நடத்தக் கூடாது என்று கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
அவற்றை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வும், செப்.1 முதல் செப்.6 வரை ஜேஇஇ தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் மற்றும் கிராமப்புறங்களில் படிக்க வாய்ப்பில்லாத மாணவர்களின் நலன் கருதி, இந்த ஆண்டு இந்த தேர்வுகளை நடத்தக் கூடாது என்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் பெரும் விவாதத்தை மத்திய அரசுக்கு எதிராக கிளப்பியுள்ளது. ஸ்டாலின், ``நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி வழக்குத் தொடரவுள்ள 7 மாநில அரசுகளைப் போல் நீட் தேர்வை எதிர்ப்பதாகக் கூறும் அதிமுக அரசும் நீதிமன்றத்தை நாட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், நீட் தேர்வை கைவிடக்கோரி மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம் எழுதியுள்ளார். அதில், ``கொரோனாவை கருத்தில் கொண்டு நடப்பாண்டு நீட் தேர்வை தவிர்க்க வேண்டும். நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து எந்த தகவலும் விஜயபாஸ்கர் வெளியிடவில்லை.