தமிழ்நாட்டில் மட்டும் தான் இரட்டை இலை சின்னம் இருக்கிறது என நினைத்து விட வேண்டாம். கேரளாவிலும் ஒரு அரசியல் கட்சிக்கு இந்த சின்னம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சின்னத்தின் எதிர்காலம் இப்போது நீதிமன்றத்தின் கையில் உள்ளது.
கேரள அரசியல் தலைவர்களில் மறைந்த கே.எம்.மாணி பெரும் சாதனையாளர் என்றால் அது மிகையல்ல. இந்தியாவிலேயே நீண்ட காலம் நிதியமைச்சராக இருந்தவர், நீண்ட காலம் ஒரே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், அதிக பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தவர் என்ற பல சாதனைகள் இவரது பெயரில் உள்ளன. இவர் சுமார் 40 வருடங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி கேரளா காங்கிரஸ் (மாணி) என்று தனது பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கினார்.
இந்தக் கட்சியின் சின்னம் தான் இரட்டை இலை ஆகும். கடந்த வருடம் இவர் மரணம் அடையும் வரை இக்கட்சியில் எந்த குழப்பமும் இல்லாமல் இருந்தது. மாணி மரணமடைந்ததின் பின்னர் இவரது மகனும், எம்.பி.யுமான ஜோஸ் கே.மாணி கட்சியைத் தனது கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தார். ஆனால் இக்கட்சியின் செயல் தலைவரான பி.ஜே.ஜோசப் அதற்குச் சம்மதிக்கவில்லை.இருவருக்கும் இடையே யார் பெரியவன் என்ற மோதல் ஏற்பட்டது. இதற்கிடையே மாணி மரணமடைந்ததால் அவர் வெற்றி பெற்ற பாலா தொகுதியில் கடந்த வருடம் இடைத்தேர்தல் நடந்தது. அப்போது கட்சியில் ஏற்பட்ட மோதல் காரணமாக இரட்டை இலை சின்னத்தைத் தேர்தல் ஆணையம் முடக்கியது. இதையடுத்து அந்த இடைத்தேர்தலில் கேரளா காங்கிரஸ் கட்சிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை. சின்னம் இல்லாததாலும், கட்சிக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலாலும் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக மாணி வெற்றி பெற்று வந்த தொகுதி பறிபோனது.
பாலா தொகுதியில் முதன்முதலாக இடது முன்னணி வெற்றி பெற்றது.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் இரட்டை இலை சின்னத்தைக் கட்சியின் செயல் தலைவரான பி.ஜே.ஜோசப்புக்கு ஒதுக்கித் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஜோஸ் கே.மாணி தேர்தல் ஆணையத்தில் அப்பீல் செய்தார். இதைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன் இரட்டை இலை சின்னத்தை ஜோஸ் கே.மாணிக்கு ஒதுக்கி உத்தரவிட்டது.இதை எதிர்த்து உடனடியாக பி.ஜே.ஜோசப் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை இன்று பரிசீலித்த உயர்நீதிமன்றம், ஜோஸ் கே,மாணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு 1 மாதத்திற்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இப்படி கேரளாவில் இரட்டை இலை சின்னம் கேரளா காங்கிரஸ் கட்சியிடம் சிக்கிப் படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.