பெரம்பலூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை பைரவி, தன்னிடம் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 16 பேருக்கு, தன் சொந்தச் செலவில் ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்திருக்கிறார். குடும்பத்தின் ஏழ்மை நிலைமையால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க ஸ்மார்ட்போன் இல்லாமல் தவித்த அந்த மாணவர்களுக்கு இந்தப் பரிசுடன் மீண்டும் பள்ளி திறக்கும்வரை ரீசார்ஜ் செலவையும் ஏற்றுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரிபவர் பைரவி. இவர் தான் அப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியராகவும் உள்ளார். இந்நிலையில் அவரிடம் 10-ம் வகுப்பு பயிலும் 16 மாணவர்கள், தொடர்ச்சியாக ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளாமல் இருந்தது தெரியவந்தது. இதையறிந்த ஆசிரியை பைரவி, தனது சொந்தப் பணம் 1 லட்சம் செலவில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்களை வாங்கிக்கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இது குறித்து ஆசிரியை பைரவி கூறியது: நான் ஏழ்மையான குடும்பத்தில் தான் பிறந்து வளர்ந்தேன். பல நாட்கள் ஒரு வேளை சாப்பாடு மட்டும் தான் எனக்குக் கிடைக்கும். அந்தக் கஷ்ட சூழலிலும் படித்து இப்போது ஒரு ஆசிரியையாகி உள்ளேன்.கடந்த வருடத்தைவிட இந்த வருடம் எங்க பள்ளியில் மாணவ, மாணவிகளின் சேர்க்கை குறைவாக இருந்தது. இதனால் மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க வலியுறுத்தியும் பள்ளியின் சிறப்பு அம்சங்கள் குறித்தும் வீடு வீடாகச் சென்று விளக்கினோம்.அப்போது என் வகுப்பு மாணவி கிருஷ்ண பிரியாவின் வீட்டுக்குச் சென்றோம். ஒழுகும் குடிசை வீடு, சேறும் சகதியுமா இருந்தது. எங்களைப் பார்த்ததும் அவங்க அம்மாவும் அண்ணனும் பதறிப்போய் பாயைப் போட்டு உட்கார வைத்தார்கள். கிருஷ்ணப்பிரியாவிடம் ஏன் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ளவில்லை என்று கேட்டேன். செல்போனில் நெட் தீர்ந்துவிட்டதாகவும், சார்ஜ் செய்யத் தனது தந்தையிடம் பணம் இல்லை என்றும் அந்த மாணவி கூறினார். தொடர்ந்து பல மாணவ, மாணவிகளிடம் பேசும்போதும் மொபைல் போனே இல்லாமல் பல மாணவிகளின் குடும்பங்கள் இருப்பது தெரியவந்தது. இன்னொரு பக்கம், ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாத நிலையில் இருந்த சில மாணவ, மாணவிகள் உயிரை மாய்த்துக் கொள்ளும் செய்திகளைப் படிக்கும்போது எனக்கு தூக்கிவாரிப் போடும்.
அப்படி ஒரு மனநிலை என்னுடைய மாணவர்களுக்கு வந்துவிடக் கூடாது என்று என் மனது தவித்தது. என்னுடைய மகள் ஜெயவதனாவிடம் மாணவர்களின் ஏழ்மை குறித்துக் கூறி, மூன்று பேருக்கு செல்போன் வாங்கிக் கொடுக்க முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்தேன். அதற்கு என்னுடைய மகள், முடிந்தால் என்னிடம் படிக்கும் எல்லா மாணவர்களுக்கும் செல்போன் வாங்கிக்கொடுங்கள் என்று கூறினாள்.பணத்துக்கு என்ன செய்வது என்று கேட்டபோது, எனக்கு நகை வாங்கச் சேர்த்து வைத்த பணத்தை எடுத்து வாங்கலாமே என்று கூறினாள். `அது உனக்காகச் சேர்த்த பணமாச்சேன்னு நான் சொல்ல, `எனக்கு எது கேட்டாலும் வாங்கிக் கொடுக்க நீங்களும் அப்பாவும் இருக்கீங்க. ஆனா, அவர்களுக்கு யாரும்மா இருக்கா? வறுமை படிப்புக்குத் தடையா இருக்கக் கூடாதும்மா. எனக்கு ரெண்டு பவுன் நகை வாங்கலைன்னு நினைச்சுக்கோங்கன்னு சொன்னது எனக்கு மிகவும் பெருமையாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது.கூல் பேட் ஆண்ட்ராய்டு வெர்ஷன், ஒரு மொபைலின் விலை 6000. 16 மொபைல்கள் 96,000. 4ஜி சிம் கார்டுகள் ஆக்டிவேஷன், நெட் பேக்னு ரூ.4000. மொத்தமா 1 லட்சம் ரூபாய் செலவாச்சு. பசங்க குடும்பத்தின் வறுமைச் சூழலால, லாக்டவுன் முடியும் வரை நானே நெட் ரீசார்ஜ் செலவையும் செய்றதா சொல்லியிருக்கிறேன்.
அது மட்டுமல்லாமல், என் வகுப்பில் (பத்தாம் வகுப்பு ஆங்கிலம் வழி) புதிதாகச் சேரும் மாணவர்களுக்கும் இதேபோல மொபைல் கொடுக்க தீர்மானித்துள்ளேன். இனி என்னுடைய மாணவர்கள் எந்தத் தடையும் இல்லாம நன்றாகப் படிப்பார்கள் என்றார் ஆசிரியை பைரவி முகமலர்ச்சியுடன்.`மிஸ் எங்களுக்கு ஸூம் ஆப்பும் இன்ஸ்டால் செய்து கொடுத்துட்டாங்க. நாங்க பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கிற இந்த வருஷம், மொபைல், ரீசார்ஜ் வசதியெல்லாம் இல்லாம எங்க படிப்பு இப்படி தடைப்பட்டு கிடக்கிறதேன்னு எங்க அப்பா, அம்மாவெல்லாம் வருத்தப்பட்டாலும், அவர்களுக்கு வேற வழியும் தெரியல. இப்போ அவங்களுக்கு எல்லாம் பெரிய நிம்மதி, எங்களுக்கும் ரொம்ப சந்தோஷம். இனி நாங்க கிளாஸுக்கு ரெடி!" - உற்சாகமாகச் சொல்கிறார்கள் அந்த நல்ல உள்ளம் படைத்த ஆசிரியை பைரவியின் மாணவ, மாணவிகள்.