நீட்தேர்வு ரத்து பிரச்னை.. அதிமுக நடத்தும் நாடகம்.. ஸ்டாலின் குற்றச்சாட்டு..

by எஸ். எம். கணபதி, Sep 14, 2020, 13:45 PM IST

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் பிரச்னையில் அதிமுக நாடகம் நடத்துகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.


தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று(செப்.14), சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உள்பட மறைந்த தலைவர்கள், மறைந்த முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அவை ஒத்தி வைக்கப்பட்டது.


இதைத் தொடர்ந்து அரங்கத்திற்கு வெளியே நிருபர்களுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி வருமாறு:


மறைந்த தலைவர்களுக்கு சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, நான் எழுந்து சபாநாயகரிடம் ஒரு கோரிக்கை வைத்தேன். நீட் தேர்வினால் எண்ணற்ற மாணவ,மாணவிகள் தற்கொலை செய்து கொண்டு தங்களுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் கொடுமை தொடர்ந்து நடைபெறுகிறது.
அவர்களுடைய பெயர்களையும் சேர்த்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது; கண்டனத்துக்குரியது.


இன்னும் 2 நாட்கள் மட்டும்தான் சபை நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் எங்கள் கட்சியின் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், “நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவை குறித்தெல்லாம் விவாதிக்க வேண்டும், கருத்துகளை எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதால் 2 நாட்கள் போதாது” என்று எவ்வளவோ வற்புறுத்தியும், அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.


ஏற்கனவே 15, 20 கவன ஈர்ப்புத் தீர்மானங்களையும், தனித் தீர்மானங்களையும் அளித்திருக்கிறோம். தொடர்ந்து மேலும் பல தீர்மானங்களையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக் கோரி நோட்டீஸ் தந்து கொண்டு இருக்கிறோம். எப்படி இந்த 2 நாட்களில் அவற்றையெல்லாம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.


முக்கியமாக நீட் பிரச்சினை; அதனால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைமையைப் பற்றி எல்லாம் பேசவேண்டும். அடுத்து புதிய கல்விக் கொள்கை; அதேபோல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை; இவை குறித்தெல்லாம் சபையில் பேசி விளக்கம் பெறவேண்டும். எங்களுடைய கருத்துகளை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று, கவன ஈர்ப்புத் தீர்மானங்களாக எடுத்துக் கொள்ளக் கோரி நோட்டீஸ் அளித்து இருக்கிறோம்.


இதைத் தவிர்த்து ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும், அவர்களுடைய தொகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க வேண்டும் என நோட்டீஸ் கொடுத்து இருக்கிறார்கள். இந்த 2 நாட்களில் அவற்றை எப்படி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பது ஒரு கேள்விக் குறியாக உள்ளது.


அதிமுக தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வை ரத்து செய்வது பற்றி சொன்னார்கள். கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்திலும் தீர்மானம் இயற்றி உள்ளார்கள். சட்டமன்றத்திலும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிலேயும் ஒப்புதல் தந்திருக்கிறார்கள். அதெல்லாம் ஒரு நாடகம்; மக்களை ஏமாற்றுவதற்கான நாடகம்.


ஆனால் இதுவரைக்கும் ஒருமுறைகூட இதற்காக முதலமைச்சரோ, சம்பந்தப்பட்ட அமைச்சர்களோ டெல்லிக்குச் சென்று பிரதமரையோ, சம்பந்தப்பட்ட அமைச்சர்களையோ இதுகுறித்து வலியுறுத்தவில்லை என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு; போதிய அழுத்தம் தரவில்லை என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு. ஆகவே இது உண்மையிலேயே கூனிக்குறுகி போயிருக்கக்கூடிய அடிமை ஆட்சியாக; மத்தியில் இருக்கும் ஆட்சிக்கு முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள் தலைமையிலான இந்த ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் பாருங்க: பிரசாந்த் கிஷோர் திமுகவிற்கு பலவீனமா ?

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Tamilnadu News

அதிகம் படித்தவை