சசிகலாவுக்கு முன்பே சுதாகரன், இளவரசி விடுதலை.. சாத்தியமா?!

by Sasitharan, Sep 15, 2020, 21:39 PM IST

பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமீபத்தில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் சசிகலா விடுதலை தொடர்பாகக் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு, சிறையின் மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் கண்காணிப்பாளர் லதா அளித்த பதிலில், சசிகலா தண்டனைக் காலத்தின்படி 2021ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி விடுதலையாக வாய்ப்பு உள்ளது. அவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த ரூ.10 கோடி அபராதத்தைச் செலுத்தாவிட்டால், கூடுதலாக ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும். மேலும், அவர் பரோலில் சென்ற காலத்தையும் கணக்கிட்டு விடுதலை தேதி மாறலாம். தண்டனை காலத்தை முழுமையாக அனுபவித்த பிறகுதான் சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இதற்கு விளக்கம் அளித்த, சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், ``தண்டனைக் காலத்தின் படி பார்த்தால் அடுத்த ஆண்டு பிப்.14இல் சசிகலா விடுதலை செய்யப்படவேண்டும். 17 நாட்கள் மட்டுமே சசிகலா பரோலில் வெளியே வந்திருக்கிறார். மொத்தம் 35 பரோல் நாட்கள் என்பதால் மீதம் 18 நாட்கள் உள்ளன. அந்த 18 நாள்களை பிப்.14 இல் இருந்து கழித்தால் ஜன.27ல் சட்டப்படி விடுதலை. இதனைத்தான் பெங்களூரு சிறை நிர்வாகம் ஆர்டிஐயில் சொல்லியுள்ளது. ஆனால் ஆனால் நன்னடத்தை விதிகளின் படி இம்மாத இறுதியிலேயே கண்டிப்பாக சசிகலா வெளியே வருவார்" என்று உறுதியுடன் கூறியுள்ளார்.

இதற்கிடையே, சசிகலாவுக்கு முன்னதாகவே சுதாகரன் விடுதலையாக வாய்ப்பிருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சசிகலா தரப்பு பேசுகையில், ``தண்டனை காலத்தைத் தொடங்குவதற்கு முன்பே சுதாகரன் 126 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். அதன்பிறகே அவருக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டது. அதனால் விடுதலைக்கு எந்த சலுகையும் கொடுக்கப்படாவிட்டாலும், இந்த 126 நாட்களைக் கழித்தால் போதும் நவம்பர் மாதமே சுதாகரன் விடுதலையாவார். இதைக் கருத்தில் கொண்டு, சுதாகரனின் வழக்கறிஞர் கடந்த வாரமே கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து ஆரம்ப பணிகளைத் தொடங்கிவிட்டார்கள். இதே தான் இளவரசிக்கும். இதனால் சசிகலா விடுதலைக்கு முன்பே சுதாகரன், இளவரசி விடுதலை ஆவார்கள்" என்று கூறியுள்ளனர்.

READ MORE ABOUT :

More Tamilnadu News