பாஜகவில் சேருவதற்கு முன்பாக நடிகை குஷ்பு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். அதில், கட்சியில் சில தலைவர்கள் தன்னை ஒதுக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, சமீப நாட்களாகவே பாஜக பக்கம் சாய்ந்து வந்தார். இந்நிலையில் தேசிய கல்விக் கொள்கைக்குப் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து இவர் கருத்துக்களை வெளியிட்டார். அன்று முதலே குஷ்பு பாஜகவில் சேரப்போவதாக தகவல் வெளியாயின. ஆனால் பலமுறை அந்த தகவலை குஷ்பு வெளிப்படையாகவே மறுத்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் ஹத்ராஸ் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் நடத்திய போராட்டத்திலும் இவர் கலந்து கொண்டார். அப்போதும், தான் பாஜகவில் சேரப் போவதாக வெளியான தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று மறுத்தார்.
இந்நிலையில் குஷ்பு பாஜகவில் சேரப் போவது தற்போது உறுதியாகி விட்டது. நேற்று இரவு இவர் தனது கணவர் சுந்தர் சியுடன் டெல்லி புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் வைத்து பத்திரிகையாளர்கள் கேட்டபோதும், எந்த தகவலையும் அவர் கூறவில்லை. நோ கமெண்ட்ஸ் என்று மட்டுமே கூறினார். இந்நிலையில் இன்று மதியம் பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து அவர் பாஜகவில் சேர்வது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் இன்று அதிரடியாகக் காங்கிரசிலிருந்து நீக்கப்பட்டார்.
அதே நேரத்தில் சோனியா காந்திக்கு குஷ்பு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பது: காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும், கட்சியின் உறுப்பினராகவும் என்னை நியமித்து நாட்டுக்காகச் சேவை செய்ய வாய்ப்பு அளித்த உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வாய்ப்பை நான் இதுவரை மிக நல்ல முறையில் பயன்படுத்தி வந்துள்ளேன். ஆனால் மக்களுடன் எந்த தொடர்பும் இல்லாத, உண்மை நிலவரம் தெரியாத கட்சியில் உள்ள சில தலைவர்கள், சில சக்திகள் என்னைப் போல உண்மையுடன் கட்சிக்காக உழைப்பவர்களை ஒதுக்க முயற்சிக்கின்றனர்.
நான் பணத்திற்காகவோ, புகழுக்காகவோ காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை. கட்சித் தலைவர்களில் சிலரது நடவடிக்கைகள் எனக்கு வேதனையை ஏற்படுத்தியது. எனவே காங்கிரஸ் கட்சியில் இருந்து நான் ராஜினாமா செய்கிறேன். இவ்வாறு குஷ்பு தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.