சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா உடல்நிலை குறித்து இணையதளங்களில் சமீபத்தில் பல்வேறு வதந்திகள் பரவியது. இதையடுத்து அவரின் உடல்நலன் குறித்து விசாரித்து பெங்களூரு சிறை நிர்வாகம் மூலமாக, சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கடிதம் எழுதினார். இதற்கு தற்போது பதில் கடிதம் அளித்து இருக்கிறார் சசிகலா. அதில், ``நான் மிகவும் நலமுடன் இருக்கிறேன். எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. தமிழக மக்கள் கொரோனாவிலிருந்து மீண்டு முற்றிலும் சகஜ நிலைக்கு வரவேண்டும்.
நன்னடத்தை விஷயத்தில் கர்நாடக சிறைத்துறை நல்ல முடிவெடுப்பார்கள் என நான் நம்புகிறேன். அதற்கான உத்தரவு எனக்கு முறைப்படியாகக் கிடைத்த பின் உங்களுக்கு தெரிவிக்கிறேன். பின்னர் அபராத தொகையை முறைப்படி நீதிமன்றத்தில் செலுத்த ஏற்பாடு செய்ய வலியுறுத்துகிறேன். கர்நாடக நீதிமன்றத்தில் அபராதத்தை செலுத்திய பிறகு, உச்ச நீதிமன்றத்தில் 14.2.2017 தேதி வழங்கிய தீர்ப்பு வழக்கு விஷயத்தில் சட்டப்படியாக சுயூரிட்டு மனுவைத் தாக்கல் செய்ய இயலுமா என்பதை மீண்டும் டெல்லி மூத்த வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து உறுதி செய்யவும். அதுதொடர்பாக, டிடிவி தினகரனிடம் ஆலோசித்து செயல்படுங்கள்" என்று கூறியுள்ளார்.