கோவாவின் துணை முதல்வர் சந்த்ரகாந்த் காவ்லேக்கர். நேற்று இவரின் மொபைல் நம்பரிலிருந்து ``VILLAGES OF GOA'' என்ற வாட்ஸ் அப் குரூப்பில் ஆபாச வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதுவும் நள்ளிரவு 1.20 மணிக்கு. இந்த விவகாரம் வெளியில் தெரியவர இப்போது பெரிய தலைவலியை சந்தித்து வருகிறார் சந்த்ரகாந்த். இந்த செயலுக்காக, துணை முதல்வர் சந்த்ரகாந்த் காவ்லேக்கர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யும்படி கோவா முன்னணி கட்சியின் மகிளா பிரிவினர் போலீஸ் ஸ்டேஷன் கதவை தட்ட, அரசியல் ரீதியாக அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
ஆனால், ``இது ஹேக்கர்களின் வேலை" என சொல்லி கோவா சைபர் பிரிவில் புகார் கொடுத்துள்ளார் சந்த்ரகாந்த் காவ்லேக்கர். மேலும், ``என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில விஷமிகள் இதை செய்துள்ளனர். நள்ளிரவு 1.20 மணி அளவில் நான் எனது போனை பயன்படுத்தவே இல்லை. அப்போது நான் உறங்கிக்கொண்டு இருந்தேன். மக்கள் மத்தியில் எனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும்" எனக் கூறியுள்ளார். இந்த சந்த்ரகாந்த் காவ்லேக்கர், காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால் பின்னாளில் 10 எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைந்தார். இதற்கு நன்றிக்கடனாக, அவருக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.