சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அதிகமானோருக்குப் பரவியது. இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழகத்தில்தான் அதிகமானோருக்குப் பரவியது. கடந்த ஆகஸ்ட் கடைசி வாரத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. சில நாட்களுக்கு இதே போல் நீடித்து வந்தது. செப்டம்பர் முதல் வாரத்தில் இது படிப்படியாகக் குறைந்து, கடந்த அக்.12ம் தேதி முதல் முறையாக 5 ஆயிரத்துக்குக் கீழ் சென்றது.
இதன்பின், தினமும் புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று(அக்.27) 2572 பேருக்கு மட்டுமே புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. இன்று தமிழகத்தில் மேலும் 2,516 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசுக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, இன்று காணொலிக் காட்சி மூலம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் உடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய ஹர்ஷவர்தன், ``தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தேசிய சராசரியை விட அதிகம். அதேபோல், தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதமும் தேசிய சராசரி அளவிலேயே இருக்கிறது. கொரோனா மாதிரிகள் பரிசோதனை தமிழகத்தில் அதிகமாக செய்வது பாராட்டிற்குரியது. வரும் காலங்களில் தமிழக அரசு கொரோனா தடுப்பு பணியில் இன்னும் சிறப்பாக செயல்படும் என நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.