தமிழக பாஜக தலைவர் முருகன் வாகனம் உள்பட 5 வாகனங்களை போலீசார் திருத்தணிக்குள் அனுமதித்தனர். தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். பாஜகவினரின் வெற்றி வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு தரப்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், இன்று எல்.முருகனின் வேல் யாத்திரைக்கு பாதி அனுமதியை போலீசார் அளித்துள்ளனர்.
இன்று காலை 8 மணிக்கே சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர் எல்.முருகன் மற்றும் தலைவர்கள் கூடினர். முருகன் காவி உடையணிந்து, நெற்றியில் பட்டை போட்டு, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் போல் காட்சியளித்தார். போலீசார் தடுத்தாலும், தடையை மீறி வேல் யாத்திரையை நடத்த அப்போது முடிவு செய்தனர். தொடர்ந்து, எல்.முருகன் அளித்த பேட்டியில், நான் முருகனை தரிசிப்பதற்காக திருத்தணிக்கு செல்கிறேன். அது அரசியல்சட்டத்தின்படி எனக்கு உள்ள உரிமை. யாரையும் கோயிலுக்கு செல்லக் கூடாது என தடுக்க முடியாது. நான் திருத்தணிக்கு செல்வேன் என்றார்.
இதன்பின், வெற்றிவேல் யாத்திரை என்ற பெயரில் மோடி படம் பொறித்த வேனில் முருகன் புறப்பட்டார். அவருடன் பல வாகனங்களில் பாஜகவினர் பின்தொடர்ந்து சென்றனர். சென்னை எல்லையான நசரத்பேட்டையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் முருகனுடைய வாகனம் உள்பட 5 வாகனங்களை மட்டும் திருத்தணிக்கு செல்ல அனுமதி அளித்தனர். மற்ற வாகனங்களை திருப்பி அனுப்பினர். இதைத் தொடர்ந்து, எல்,முருகன் திருத்தணிக்கு சென்றார். அங்கு கோயிலில் அவர் தரிசனம் செய்தார். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், வேல் யாத்திரைக்கு தடை விதிக்கவே காவல்துறை முதலில் முடிவு செய்தது. ஆனால், தடை விதித்தால் எல்லா மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டம் செய்து ஏதாவது பிரச்னை செய்ய வேண்டுமென்று அவர்கள் முடிவு செய்திருந்தனர்.
அதனால், கட்சித் தலைவர் முருகனையும் சிலரையும் மட்டுமே யாத்திரை செல்ல அனுமதித்தால் அது தேவையற்ற பிரச்னைகளை தடுக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. இப்படி செய்வதன் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட வேல் யாத்திரையை பிசுபிசுக்க வைத்து விடலாம் என்றும் கணித்தோம். அதன்படியே அனுமதி அளித்தோம் என்று தெரிவித்தார்.