வேளாண் சட்டங்களுக்கு எதிரான கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: சேலத்தில் ஸ்டாலின் பங்கேற்பு

by SAM ASIR, Dec 5, 2020, 17:34 PM IST

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் இன்று கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதற்காகக் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் சொந்த மாவட்டமாகிய சேலத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்தவர்களைத் தடுத்து நிறுத்தி திருமண மண்டபங்களில் அடைத்து வைத்திருக்கிறார்கள். வேலூரில் துரைமுருகன், மயிலாடுதுறையில் டி.ஆர் பாலு, திண்டுக்கல்லில் ஐ பெரியசாமி, நீலகிரியில் ராஜா, நாமக்கல்லில் அந்தியூர் செல்வராஜ், ஈரோட்டில் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோரும் பல்வேறு பகுதிகளில் நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களும் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர்.

முதல்வரின் மாவட்டமான சேலத்தில் நான் கலந்து கொண்டுள்ளேன். மண்ணையும் மக்களையும் காக்கும் போராட்டத்திற்குத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவளிக்கும். இந்தியாவின் அனைத்து சாலைகளும் டெல்லியை நோக்கிச் செல்வது போன்ற தோற்றத்தை இப்போராட்டம் ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப், ஹரியானா, உத்திர பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து விவசாயிகள் டெல்லியில் குவிந்துள்ளனர்.

வறுமையை அறியாதவர் இதுபோன்ற சட்டங்களைக் கொண்டு வந்திருந்தால் ஆச்சரியமிருக்காது. தன்னை ஏழைத் தாயின் மகன் என்று சொல்லிக்கொள்ளும் பிரதமர் இச்சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். தன்னை விவசாயி என்று தம்பட்டம் அடிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதை ஆதரிக்கிறார். விவசாயிகளின் போராட்டத்தைத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்கிறது என்று கூறினார்.

You'r reading வேளாண் சட்டங்களுக்கு எதிரான கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: சேலத்தில் ஸ்டாலின் பங்கேற்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை