தமிழ்வழி ஒதுக்கீட்டில் தேர்வான 85 பேரின் சான்றிதழ்களை சமர்ப்பிக்க டிஎன்பிஎஸ்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

2016 - 2019 வரை டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் 20 சதவீத தமிழ் வழி இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 85 பேரின் சான்றிதழ்களைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. .

by Balaji, Dec 5, 2020, 17:42 PM IST

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில் "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2019 ஜனவரி 1ல் துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டது. அதற்கு நான் விண்ணப்பித்து. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, எழுத்துத் தேர்வும் எழுதினேன். தொடர்ந்து பிரதான எழுத்துத் தேர்வு அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்குத் தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் டிசம்பர் 9 இல் வெளியிடப்பட்டது. அதில் எனது பெயர் இடம் பெறவில்லை. தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான ஒதுக்கீட்டிலும் நான் தேர்வு செய்யப்படவில்லை.

இது குறித்து விசாரித்தபோது தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான இட ஒதுக்கீட்டுச் சலுகை, தொலைநிலை கல்வியில் பயின்றவருக்கும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தொலைநிலைக் கல்வி பயின்றவர்களுக்குத் தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு வழங்குவது பொருத்தமாக இருக்காது. தொலைநிலை கல்வியில் பயில்வோர் சில பாடங்களை ஆங்கில வழியில் பயில்கின்றனர்.

சில பாடங்களைத் தமிழ் வழியில் படிக்கின்றனர். ஆகவே இவர்களைத் தமிழ் வழியில் பயின்றவர்களாகக் கருத இயலாது. TNPSCயின் ஒவ்வொரு தேர்வு அறிவிப்பிலும் தமிழ் வழியில் பயின்றவருக்குக் கொடுக்கப்படும் 20 சதவிகித இட ஒதுக்கீட்டை பெரும்பாலும் தொலைநிலை கல்வி பயின்றவர்களே பெற்று வருகின்றனர். ஆகவே தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான சலுகை அடிப்படையில் தேர்வானவர்களுக்குப் பணி நியமன உத்தரவு வழங்கத் தடை விதிக்க வேண்டும். தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் குரூப் 1 தேர்வு நடைமுறைக்குத் தடை விதிக்க வேண்டும். தொலைநிலை கல்வியில் அல்லாமல் கல்லூரிக்குச் சென்று தமிழ் வழியில் பயின்றவர்களை அடிப்படையாகக் கொண்டு புதிய பட்டியல் வெளியிட்டு குரூப்1 பணியிட நியமனத்தை நடத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் 2016 - 2019 ஆம் ஆண்டுவரை 85 பேர் தேர்வு செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர்.அப்போது நீதிபதிகள் ஆங்கிலம் படித்தவர்களுக்கு உலகம் முழுவதும் வாய்ப்பு உள்ளது. ஆனால் தமிழ் வழியில் படித்தவர்களுக்குத் தமிழ்நாட்டில்தான் வாய்ப்புள்ளது எனக் கருத்து தெரிவித்தனர்.

மேலும் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 85 நபர்களின் சான்றிதழ்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க உத்தரவிட்டனர்.மேலும் தமிழ் மொழியில் கல்லூரிகளுக்கு சென்று படித்தவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி 20 சதவீத இட ஒதுக்கீட்டில் முறையாக தேர்வு செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர்கள் இந்த 20 சதவீத இட ஒதுக்கீடு திருத்த சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக 8 மாதங்களாக காத்திருப்பில் உள்ளது என தெரிவித்தனர்.

இதனையடுத்து நீதிபதிகள் ஆளுநரின் செயலர் மற்றும் உள்துறைச் செயலர் ஆகியோரை இந்த நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்ப்பதாக உத்தரவிட்டனர். மேலும் ஆளுநரின் செயலர் மற்றும் உள்துறை செயலர் இந்த சட்ட திருத்த மசோதா குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

You'r reading தமிழ்வழி ஒதுக்கீட்டில் தேர்வான 85 பேரின் சான்றிதழ்களை சமர்ப்பிக்க டிஎன்பிஎஸ்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை