பிக்பாஸ் நிகழ்ச்சியை எந்த அமைச்சரும் பார்ப்பதில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார். மதுரையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, இன்று(டிச.18) நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:அதிமுக தேர்தலில் தனித்துத்தான் போட்டியிடும். மக்கள்தான் எங்களுக்கு எஜமான். மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். நாங்கள் மக்கள் பக்கம் இருக்கிறோம். மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்துகிறோம். ஆனாலும், தேர்தல் சமயத்தில் வாக்குகள் பிரிந்து விடக் கூடாதே என்பதற்காகக் கூட்டணி வைக்கிறோம். அது அந்த நேரத்தில் மட்டும்தான்.
கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சியை நாங்கள் பார்ப்பதே இல்லை. முதலமைச்சரோ, மற்ற அமைச்சர்களோ பார்ப்பதில்லை. எங்களுக்கு நேரமே கிடையாது. அமைச்சர் பதவி என்பது முள் மீது அமர்ந்திருப்பது போலாகும். மலர் மேல் இருப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். இவ்வாறு செல்லூர் ராஜூ கூறியுள்ளார். ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சியைக் கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் நேற்று பேசும்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கும் ஒரு குடும்பம் கூட நல்லா இருக்காது. அந்த நிகழ்ச்சியைப் பார்த்தால், அத்தோடு அந்த குடும்பம் காலி என்று சாடியிருந்தார். அதே போல், அமைச்சர் ஜெயக்குமாரும் கமலை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.