தளபதி நடிகர் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தைக் கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் , ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூந்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிரூத் இசை அமைத்துள்ளார். இப்படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு வந்ததால் படப்பணிகள் எல்லாம் தள்ளி வைக்கப்பட்டன. கொரோனா ஊரடங்கு தளர்வில் மீண்டும் இதன் இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்றன.
ஆனாலும் தியேட்டர்கள் திறக்கப்படாமல் மூடப்பட்டிருந்ததால் படத்தை ரிலீஸ் செய்வதில் குழப்பம் நிலவியது. கடந்த நவம்பர் மாதம் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் 50 சதவீத டிக்கெட் மட்டுமே அனுமதி என்று அரசு அறிவித்திருந்தது. இதனால் மாஸ்டர் படம் ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டது. ஒடிடி தளத்தில் இப்படம் வெளியாகும் என்று கடந்த 5 மாதத்தில் 3 முறை வதந்தி பரவியது.
ஆனால் தியேட்டர்கள் முழுமையாகத் திறந்த பிறகே மாஸ்டர் படம் வெளியிடப்படும் என்று பட நிறுவனம் அறிவித்தது. அதற்கு தியேட்டர் அதிபர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இதற்கிடையில் படத்தில் இடம்பெறும் பாடல்கள் யூ டியூபில் வெளியாகி ஹிட்டானது. டிரெய்லரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. மாஸ்டர் படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க விழா வில் கலந்துகொண்ட செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விரைவில் தியேட்டரில் 100 சதவீத டிக்கெட் அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில் மாஸ்டர் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படம் பார்த்த அதிகாரிகள் யூ/ஏ சான்று அளித்திருக்கின்றனர். படம் 1.50.02 நிமிடங்கள் திரையில் ஓடும் என்று தெரிகிறது. அதாவது இரண்டரை மணி நேரம் கூடுதலாக இரண்டு நொடிகள் என்று கூறப்படுகிறது.நேற்று முன்தினம் மாஸ்டர் படத்தின் தெலுங்கு டிரெய்லர் வெளியிடப்பட்டது. இப்படம் பல மொழிகளில் ஒரே நாளில் வெளியாக உள்ளது.