இந்தியாவிலேயே மிக இளம் வயதில் மேயரான திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆர்யா ராஜேந்திரனுக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன. நடிகர் கமல்ஹாசன், பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி உள்படப் பலர் ஆர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.திருவனந்தபுரம் மாநகராட்சியின் புதிய மேயராக இடது முன்னணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 21 வயதான கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.
இவர் திருவனந்தபுரத்திலுள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று திருவனந்தபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் பதவிக்கான வாக்கெடுப்பு நடந்தது. திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் நவ்ஜோத் கோசா முன்னிலையில் இந்த வாக்கெடுப்பு நடந்தது. இதில் பாஜக வேட்பாளரை விட ஆர்யா ராஜேந்திரனுக்கு 19 வாக்குகள் அதிகமாகக் கிடைத்தன. இதையடுத்து ஆர்யா ராஜேந்திரன் மேயராக அறிவிக்கப்பட்டார். இதன்பின்னர் அவருக்கு கலெக்டர் நவ்ஜோத் கோசா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து இந்தியாவிலேயே மிகக் குறைந்த வயதில் மேயராக பொறுப்பேற்கும் நபர் என்ற பெருமை ஆர்யா ராஜேந்திரனுக்குக் கிடைத்தது. இதற்கு முன்பும் திருவனந்தபுரம் மாநகராட்சியைச் சேர்ந்தவர் தான் மிக இளம் வயதில் மேயராகி சாதனை படைத்துள்ளார். இது 70 வருடங்களுக்கு முன் நடந்தது. 1950ல் 32 வயதான கோவிந்தன் குட்டி என்பவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 70 வருடங்களாக இதுதான் சாதனையாக இருந்தது. தற்போது இந்த சாதனையை ஆர்யா ராஜேந்திரன் முறியடித்துள்ளார்.இந்நிலையில் மிக இளம் வயதில் மேயராகி உள்ள ஆர்யா ராஜேந்திரனுக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே பிரபல மலையாள நடிகர் மோகன்லால், ஆர்யாவை போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில் பிரபல நடிகர் கமல்ஹாசன், தொழிலதிபர் கவுதம் அதானி உள்படப் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டிவிட்டரில் கூறியிருப்பது: 'மிக இளம் வயதிலேயே திருவனந்தபுரம் மேயராக பொறுப்பேற்றுள்ள தோழர் ஆர்யா ராஜேந்திரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழகத்திலும் எம் மாதர் படை மாற்றத்திற்குத் தயாராகி விட்டது என்று குறிப்பிட்டுள்ளார். பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி தன்னுடைய டிவிட்டரில் கூறியிருப்பது: இந்தியாவில் மிகக் குறைந்த வயதில் மேயராக பதவியேற்றுள்ள ஆர்யா ராஜேந்திரனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு மிகுந்த அதிசயத்தை ஏற்படுத்துகிறது.அரசியலில் மேலும் மேலும் இளைஞர்கள் வருவதற்கு இது பெரும் ஊக்கமாக அமையும். இதுதான் நம்பமுடியாத இந்தியா என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.