தேர்தல் பிரசாரத்துக்காக தனி விமானத்தில் சென்றது குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, கடந்த மாதம் சேலம் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வந்தார். தேர்தல் பிரசாரத்திற்கு கமல்ஹாசன் தனி விமானத்தில் வந்தது விமர்சனங்களுக்கு உள்ளானது.
இந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்த கமல்ஹாசன், எங்கள் செலவில் நாங்கள் தனி விமானத்தில் பறக்கிறோம். மக்கள் பணத்தில் இல்லை. என்னுடைய மக்களைப் பார்க்க சீக்கிரமாகச் சென்று பார்க்கவும் முடியும். அதற்காகச் செலவு செய்கிறேன். நேற்று வரை டீ கடையும், பூக்கடையும் வைத்திருந்தவர்கள் இன்று கோடீசுவரர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பணம் வைத்திருக்கிறார்கள். இதனைப்பற்றி எப்படியென்று யாருமே கேட்கவில்லை. எங்களுக்குக் குறிப்பிட்ட நேரமே கொடுக்கப்பட்டுள்ளது. குறுகிய நேரத்தில் சீக்கிரம் மக்களைப் பார்க்க வேண்டும் என்றார்.
நான் 234 படங்களில் நடித்திருக்கிறேன். அந்த பணத்தை வைத்து 100 கோடி ரூபாயில் சினிமாவும் எடுக்கலாம். மக்கள் ஆதார வசதி கூட இல்லாமல் தவிப்பதைப் பார்த்துப் பார்த்து அலுத்து நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். என்னைப் பார்த்து, நீங்கள் தனி விமானத்தில் வருகிறீர்கள். நீங்கள் எப்படி அரசு நடத்துவீர்கள்? என்று கேட்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.