அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரியில் கேரளாவை சேர்ந்த ஒரு வாலிபருக்கு 40 கோடி முதல் பரிசு கிடைத்துள்ளது. அபுதாபியில் டியூட்டி பிரீ பிக் டிக்கெட் என்ற பெயரில் பரிசு குலுக்கல் நடைபெற்று வருகிறது. இந்த டிக்கெட்டின் பரிசுகள் அனைத்துமே கோடிகளில் தான் இருக்கும். இந்த டிக்கெட் வாங்குபவர்களின் செல்போன் எண்களை பிக் டிக்கெட் நிறுவனத்தினர் வாங்கி வைத்துக்கொள்வது வழக்கம். பரிசு விழுந்தால் போனில் தான் அவர்களுக்கு விவரத்தை அளிப்பார்கள். இந்நிலையில் சமீபத்தில் நடந்த குலுக்கலில் முதல் பரிசாக ₹ 40 கோடி என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கானோர் இந்த டிக்கெட்டை வாங்கி இருந்தனர். இந்நிலையில் குலுக்கலில் 323601 என்ற எண்ணுக்கு முதல் பரிசான ₹ 40 கோடி கிடைத்தது. இதையடுத்து அந்த டிக்கெட்டை வாங்கியவர் யார் என கண்டுபிடிப்பதற்காக அந்த நபரின் செல்போனில் பிக் டிக்கெட் நிர்வாகிகள் அழைத்தனர்.
ஆனால் போன் கிடைக்கவில்லை. பலநாட்கள் அந்த நம்பரில் அழைத்தும் இணைப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து அந்த டிக்கெட்டை வாங்கியவர் யார் என தெரியாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து இந்த விவரங்கள் சமூக இணையதளங்களில் வெளியிடப்பட்டன. இதன் பிறகு தான் 40 கோடிக்கான அந்த அதிர்ஷ்டசாலி யார் என தெரியவந்தது. கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல் சலாம் (28) என்ற வாலிபர் தான் இந்த மகா அதிர்ஷ்டசாலி ஆவார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து இந்த டிக்கெட்டை வாங்கியுள்ளார். பிக் டிக்கெட் வாங்கும் போது அவர் கொடுத்த செல்போன் எண்ணுடன் இந்தியாவின் 91 என்ற கோடு நம்பரையும் சேர்த்து கொடுத்ததால் தான் செல்போன் இணைப்பு கிடைக்காமல் போனது. தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து இந்த டிக்கெட்டை வாங்கியதாகவும் பரிசுத் தொகையை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வேன் என்றும் அப்துல் சலாம் கூறினார்.