சசிகலாவுக்கு நேற்று(ஜன.20) நள்ளிரவில் மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகச் செய்தி வெளியாகியுள்ளது. பெங்களூரு மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் 2வது குற்றவாளியாகத் தண்டனை பெற்ற சசிகலா, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். அவர் வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்பட உள்ளார். இந்நிலையில், சசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் நேற்று அவர் பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள போரிங் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சசிகலாவுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு பிரச்சனை மற்றும் சளி, காய்ச்சலாலும் அவதிப்பட்டு வருவதாக கூறப்பட்டது. அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், ஆக்சிஜன் செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை டீன் மனோஜ் தெரிவித்தார். இதன்பிறகு, சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டது.இதன் பின்னர், நேற்று(ஜன.20) நள்ளிரவு ஒரு மணியளவில் சசிகலாவுக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவருக்கு டாக்டர்கள் உடனடி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
இதற்கிடையே, சசிகலாவுக்கு ஒரு வாரமாகக் காய்ச்சல் இருப்பதாகவும், பெங்களூரு சிறை நிர்வாகத்தினர் அதை அவரது குடும்பத்தினருக்குக் கூட தெரிவிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.ஏற்கனவே, சசிகலா வருகை அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்த போது, கட்சியில் சசிகலா அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. எனவே, அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சசிகலாவுக்கு ஆதரவாக இருந்தவர்கள் பெரும்பாலானோர் கட்சிக்குத் திரும்பி விட்டனர். டி.டி.வி.தினகரன் தனியாகத்தான் இருக்கிறார். அவரால் எந்த பாதிப்பும் வராது என்று கூறியிருந்தார்.இது அதிமுகவில் இருக்கும் தீவிர விசுவாசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், சசிகலாவால்தான் எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சரானார், இப்போது அவர் அதை அடியோடு மறுத்துப் பேசினால், மக்கள் அதிமுகவினரைத் துரோகிகளாகப் பார்ப்பார்கள். அது தேர்தலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே முக்குலத்தோர் கட்சியாக இருந்த அதிமுக தற்போது கவுண்டர் கட்சியாக மாறி விட்டது என்று பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் முதலமைச்சர் பேசியது அதை உறுதி செய்வதாகி விடும். அவர் சசிகலா பற்றிப் பேசாமல் மவுனம் காத்திருக்க வேண்டும் என்றார்.