ஓபிஎஸ் - இபிஎஸ் மோதல்.. அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படுமா?

by எஸ். எம். கணபதி, Feb 15, 2021, 10:53 AM IST

அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே உச்சகட்டப் பனிப்போர் நிலவுவதால், கட்சி மீண்டும் உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. முதல்வராக ஓ.பி.எஸ் பதவியேற்பு, 2 மாதங்களில் ராஜினாமா, கட்சியின் பொதுச் செயலாளராகவும், முதல்வராகவும் சசிகலா தேர்வு, சசிகலாவுக்குச் சிறைத்தண்டனை, கூவத்தூரில் முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்வு, இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் இணைப்பு, சசிகலா குடும்பம் நீக்கம் என்று பல மாற்றங்கள் ஏற்பட்டாலும், ஆட்சி அதிகாரம் என்ற ஒற்றைக் கயிறு அனைவரையும் கட்டி வைத்திருந்தது.

கூவத்தூர் விடுதியில் சசிகலாவால் முதலமைச்சராக அடையாளம் காட்டப்பட்ட எடப்பாடி பழனிசாமி தற்போது முழுக்க மாறி விட்டார். சசிகலாவின் காலில் விழுந்து வணங்கி பதவியைப் பெற்ற அவர், தன்னை முதலமைச்சராக ஆக்கியது சசிகலா அல்ல. அதிமுகவின் எம்எல்ஏக்கள் தான் தேர்வு செய்தனர் என்று இப்போது கூறியுள்ளார். மேலும், சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதற்கு 100 சதவீதம் வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

அதே சமயம், எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ள முடியாமல் புழுங்கிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் கடந்த பிப்.7ம் தேதி தினமலர் நாளேட்டின் முதல் பக்கத்தில் முழுப்பக்க விளம்பரம் தரப்பட்டது. அந்த விளம்பரத்தில், விசுவாசத்தில் நிகழ்கால பரதன் என்ற கொட்டை எழுத்தில் தலைப்பிடப்பட்டிருந்தது. விளம்பரத்தில் ஒருவருக்கு முதலமைச்சர் அரியாசனத்தை வழங்கி விட்டு, மீண்டும் அது திரும்பப் பெறப்பட்டதாக வரலாறே இல்லை. அந்த புதிய வரலாற்றைப் படைத்துக் காட்டியவர் அன்பு சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்-- ஜெயலலிதா என்று குறிப்பிடப்பட்டிருந்தது.இதனால், ஓபிஎஸ்-இபிஎஸ் இடையேயான பனிப்போர் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி நேற்று(பிப்.14) சென்னை வந்து பிரம்மாண்டமான அரசு விழாவில் பங்கேற்றார். முன்னதாக, பிரதமரை வரவேற்று பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் தமிழக அரசின் விளம்பரம் வெளியாகி இருந்தது.

அதில், பிரதமர் மோடி, ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்கள் மட்டும் வெளியாகி இருந்தது. தினத்தந்தி நாளிதழ் இன்று இதழ்களை வெளியிட்டிருந்தது. ஒரு தினத்தந்தியின் முதல் பக்கத்தில் இந்த அரசு விளம்பரம் வந்திருந்தது. இன்னொரு தினத்தந்தியின் முதல் பக்கத்தில் ஓ.பி.எஸ் சார்பில் முழுப்பக்க விளம்பரம் வந்திருந்தது. அதில் அயோத்திக்குக் கிடைத்த பரதனைப் போல் தமிழகத்திற்கு கிடைத்த ஓபிஎஸ் என்று தலைப்பு செய்தி போல் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அதில் ஆந்திராவில் என்.டி.ராமாராவை கவிழ்த்து மருமகன் சந்திரபாபு நாயுடு முதல்வரானது, கர்நாடகாவில் தேவகவுடாவைக் கவிழ்த்த மகன் குமாரசாமி, உ.பி.யில் முலாம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் தனது தந்தையிடம் இருந்து பதவியைப் பறித்தது என்று நம்பிக்கைத் துரோகத்திற்குப் பல உதாரணங்கள் கூறப்பட்டிருந்தது. இவை, சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்டு, அவரது காலில் விழுந்து ஆசி பெற்று முதல்வரான எடப்பாடி பழனிசாமி, நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார். அவரது பண்பில் விசுவாசம் துளியும் இல்லை என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளன.

சசிகலா திரும்பி வந்த பிறகு அவரையும், டி.டி.வி.தினகரனையும் கடுமையாக விமர்சித்தது அமைச்சர் சி.வி.சண்முகம்தான். அதே போல், சசிகலாவுக்கு எந்த செல்வாக்கும் இல்லை என்று உதாசீனப்படுத்தும் கருத்துக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட சிலர் மட்டுமே கூறியிருக்கிறார்கள். அதே சமயம், தென்மாவட்டங்களைச் சேர்ந்த முக்குலத்தோர் அமைச்சர்கள் ஓ.பி.எஸ், செல்லூர் ராஜு, உதயகுமார் உள்ளிட்ட யாருமே சசிகலாவை விமர்சிக்கவில்லை. இதனால், அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் - இபிஎஸ் மோதல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால், கட்சி மீண்டும் இரண்டாகப் பிளவுபடுமா? அல்லது சசிகலா தரப்பினரையும் சேர்த்துக் கொள்ளும் முயற்சி பலிக்குமா என்பது சட்டசபையின் இறுதி கூட்டம் முடிந்த பின்பு தெரியும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

You'r reading ஓபிஎஸ் - இபிஎஸ் மோதல்.. அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படுமா? Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை