தினகரனின் முதலமைச்சர் ஆசைதான் இவ்வளவு பிரச்சினையும்! - திவாகரன்

by Lenin, Apr 26, 2018, 20:26 PM IST

தினகரன் முதலமைச்சராக ஆசைப்பட்டதால் தானே அதிமுகவுக்கு இவ்வளவும் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது என்று சசிகலா சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், “எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் ஒப்பிடும் போது தினகரனே இப்போது துரோகியாக தெரிகிறார். அவர்கள் இருவரும் எவ்வளவோ பரவாயில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. டி.டி.வி.தினகரனை சசிகலா துணை பொதுச்செயலாளராக அறிவித்தபோதே நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் எடப்பாடி பழனிசாமியை தான் ஆதரித்தேன். அதே நேரத்தில் எடப்பாடி அணியிலிருந்து எனக்கு ஒத்துழைப்பு போதவில்லை.

மேலும் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் சிலர் என்னை சமாதானம் செய்து குடும்பம் பிரிந்து விடக்கூடாது என்று என்னிடம் கூறி தினகரனை ஆதரிக்க சொன்னதால் ஆதரித்தேன். இனி அந்த தவறு நடக்காது. இந்த தவறுக்கு சசிகலா காரணமல்ல.

ஓ.பி.எஸ். மீது குற்றம் சுமத்தி அவரை வெளியில் அனுப்பினார்கள். அதன் பின்னர் அவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள சில விஷயங்களை செய்தார். அதே போன்று எடப்பாடியிடமும் நடந்து கொண்டனர். ஆனால் அவரிடம் பாட்சா பலிக்கவில்லை.

இப்போது என்னிடமும் அதே போன்று நடந்து கொள்கிறார்கள். எங்கிட்டேயும் அவர்களின் பாட்சா பலிக்காது. எது உண்மை, எது பொய் என்பதை காலம் தான் நிர்ணயிக்கப்போகிறது. அதிமுகவுக்கு சறுக்கல் யாரால் வந்தது? திவாகரனால் வந்ததா? தினகரனால் வந்ததா?

யாருடைய ஆசையால் அதிமுகவுக்கு இவ்வளவு கெடுதல் ஏற்பட்டுள்ளது. தினகரன் முதலமைச்சராக ஆசைப்பட்டதால் தானே அதிமுகவுக்கு இவ்வளவும் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. சின்னம்மா சிறையில் இருந்தபடியே பொதுச் செயலாளராகவே இருந்திருப்பார்.

பெங்களூர் சிறைக்கு சென்று அவரிடம் முதலமைச்சர் பதவியை கேட்டார். அவர் கொடுக்கவில்லை. அடுத்த கட்டமாக துணைப் பொதுச்செயலாளர் பதவியையாவது கொடுங்கள் என்று பிச்சை கேட்டார். அவரும் அந்த பதவியை வழங்கினார். அதை வைத்து இப்போது எல்லோரையும் ஆட்டி வைக்கிறார். இதனால் சசிகலாவுக்கு கெட்ட பெயர்தான் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading தினகரனின் முதலமைச்சர் ஆசைதான் இவ்வளவு பிரச்சினையும்! - திவாகரன் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை