நடப்பு கல்வியாண்டிற்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஜூலை 15-ஆம் தேதி முதல் தொடங்கும் என பேரவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக உறுப்பினர் சக்கரபாணி, ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட அரசு முன்வருமா என்றும் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்த மாணவர்கள் எத்தணை பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்? எனவும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், "தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கட்டடங்கள் இல்லாதவை, பழுதடைந்த கட்டடங்களை கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." என உறுதி அளித்தார்.
மேலும், "நடப்பு கல்வியாண்டிற்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஜூலை 15-ஆம் தேதி முதல் தொடங்கும்" என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
அதேபோல், தமிழகத்தில் கல்லூரிகள் மூடப்படுவதை தடுக்கக் கோரி கீழ்பெண்ணாத்தூர் திமுக உறுப்பினர் பிச்சாண்டி வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், "தமிழகத்தில் உயர்கல்வி பயிலக்கூடியவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கடந்தாண்டு ஆயிரத்து 221 புதிய பாடப்பிரிவுகள், இந்த ஆண்டு 264 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது.
சில கல்லூரிகள் தரம் குறைந்து இருப்பதாலும், மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால் மட்டுமே மூடப்படுகின்றன." என விளக்கம் அளித்தார்.