சென்னை அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களுள் 5 பேர் ஜாமின் கோரி சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சிறுமியை, ஏழு மாதங்களாக மிரட்டி வன்கொடுமை செய்ததாக 17 பேர், ஜூலை 18 ஆம் தேதி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட இவர்களின் நீதிமன்ற காவல், ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக கருதப்படும் முருகேஷ், ஜெய் கணேஷ், சூரியா, ஜெயராமன், ராஜசேகர் ஆகிய 5 பேரும் ஜாமின் கோரி சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், சிறுமிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் அந்த குடியிருப்பைச் சேர்ந்த 22 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் 17 பேரை மட்டுமே போலீசார் கைது செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், போலீசார் தங்களை தவறாக கைது செய்துள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் விதிக்கின்ற நிபந்தனைகளை ஏற்று விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.
இந்த மனு மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.