பருவமழை தீவிரத்தை 5 நாட்களுக்கு முன்பாக கண்டறிவதக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. வெள்ளத்தின் அபாயத்தை முன் கூட்டியே அறியும் வகையிலான சென்னை வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு உருவாக்கப்பட்டது.
இதற்காக அமைச்சர் முன்னிலையில், வருவாய்த்துறை ஆணையர் சத்யகோபால், இந்திய கடலோர தேசிய ஆராய்ச்சி மைய இயக்குனருடன் எம்வி ரமணமூர்த்தியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர் பேசிய அமைச்சர், ஐந்து நாட்களுக்கு முன்பாகவே வெள்ளத்தின் அபாயம் மற்றும் பாதிக்கப்படக்கூடிய இடம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது." எனக் கூறினார்.
"தேசிய கடல் ஆராய்ச்சி மையம், மும்பை இந்திய தொழில்நுட்ப மையங்கள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வு நிறுவனம் ஆகியவை கூட்டாக வடிவமைக்கப்பட்ட அமைப்பாக இது இருக்கும்." என்றார்.
"வடகிழக்கு பருவ மழையை எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம். 32 வருவாய் மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் நேரடி ஆய்வு, காணொலி காட்சி மூலமாகவும் ஆய்வு பணிகள் தொடரும். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது."
"மேலும், வருவாய் நிர்வாக துறையில் வரும் மனுக்களின் நிலையை அறியவும், நடவடிக்கையை கண்காணிக்கவும் வளைதளபயன்பாடு உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்" என அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.