சபாநாயகர் தனபாலை தகுதி நீக்கம் செய்யக் கோரி பேரவை செயலரிடம் எம்.எல்.ஏ கருணாஸ் சார்பில் அளிக்கப்பட்ட மனுவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
கருணாஸ் சார்பில் வழங்கப்பட்ட அந்த மனுவில், தமிழக சட்டமன்ற விதி 68ன்படி தீர்மானம் ஒன்றை கொண்டு வரவுள்ளதாகவும், அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் தனபால் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும், அதன் காரணமாக பல சட்டமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
சட்டமன்ற மரபு மற்றும் அரசியல் சட்டத்தை மீறும் வகையில் சபாநாயகரின் செயல்பாடு உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சட்டப்பேரவையை கூட்டி தீர்மானம் கொண்டு வந்து சபாநாயகரை நீக்க வேண்டும் என அந்த மனுவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அருணாசலபிரதேச மாநில வழக்கு ஒன்றில், சபாநாயகரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு நிலுவையில் இருக்கும் போது, கட்சி தாவல் சட்டத்தின் கீழ் சபாநாயகர் எந்த எம்எல்ஏவையும் தகுதி நீக்கம் செய்ய முடியாது என ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை பயன்படுத்தியே, சட்டப்பேரவை செயலரிடம் கருணாஸ் மனு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, வடபழனியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எம்.எல்.ஏ கருணாஸை தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உடல்நலம் குறித்து கருணாஸிடம் விசாரித்தார். பின்னர் பேசிய அவர், ஒரு தலை பட்சமாக செயல்படும் தமிழக சட்டமன்ற தலைவர் தனபால் மீது கருணாஸ் அளித்த மனுவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து தி.மு.க பரிசீலிக்கும்" என்றார்.