தொழிலதிபர்கள் ரன்வீர் ஷா, கிரண் ராவ் ஆகியோரை கைது செய்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தொழிலதிபர்கள் ரன்வீர் ஷா மற்றும் கிரண்ராவ் ஆகியோரின் வீடுகளில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டு பல கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளை பறிமுதல் செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக அவர்கள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இந்த சிலைகளுக்கான சான்றிதழ்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ரன்வீர் ஷா தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஆய்வு செய்த நீதிபதிகள், கலை பொருள் காட்சியகங்கள் சிலைகளை விற்க அனுமதி இல்லை என்றும், சிலைகளை வைத்துக் கொள்வதற்கான பதிவுச் சான்றிதழ் மட்டுமே வழங்கப்படுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலைக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தீனதயாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் இவர்கள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இவர்களைக் கைது செய்து விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் எனவும் தெரிவித்தார்.
இதேபோல நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ ஜி பொன் மாணிக்கவேல், இருவர் வீடுகளிலும் 222 சிலைகள் மற்றும் கோவில் தூண்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சிலைகளுக்கான சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை என்றும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து இது சம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.