தமிழகத்தின் முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதியதாக வேறு ஒரு அணையை கட்ட கேரளா அரசுக்கு மத்திய சுற்று சூழல் அமைச்சகம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
புதிய அணை கட்டுவதற்கு கேரளாவுக்கு 7 நிபந்தனைகள் கூடிய சுற்றுசூழல் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக அரசு, கேரளா அரசு அணை கட்ட ஆய்வு மேற்கொள்ளும் முயற்சியை எதிர்த்து வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், முல்லை பெரியாறில் கட்டப்பட உள்ள புதிய அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், முல்லை பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு தொடர்பான ஆய்வு அறிக்கைகளை தயாரிக்க கேரளா அரசுக்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுசூழல் அமைச்சகம் கொடுத்துள்ள இந்த அனுமதி உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் படி உள்ளது. எனவே, மத்திய சுற்று சூழல் அமைச்சகம் கொடுத்த அனுமதியை திரும்ப வாபஸ் பெற வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் என்றும், கேரளா அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.