ஆத்தூர் சிறுமி ராஜலட்சுமியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு எடப்பாடியை சந்தித்துப் பேசியிருக்கிறார் திருமாவளவன். எச்.ராஜாவின் செயல்பாடுகள் பற்றித்தான் முதல்வரிடம் சொன்னோம். பா.ஜ.கவை நம்பி நாங்கள் கிடையாது என்றார் முதலமைச்சர்' என்கின்றனர் சிறுத்தைகள் வட்டாரத்தில்.
சென்னை, அடையாறில் உள்ள முதலமைச்சரின் வீட்டுக்கு நேற்று மாலை சென்றார் வி.சி.க தலைவர் திருமாவளவன். அவருடன் பொதுச் செயலாளர் ரவிக்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் சென்றுள்ளனர். கூடவே, படுகொலை செய்யப்பட்ட சிறுமி ராஜலட்சுமியின் பெற்றோரும் சென்றுள்ளனர்.
சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திருமாவளவன், ` படுகொலை செய்யப்பட்ட ராஜலட்சுமியின் பெற்றோர், அதே இடத்தில் வசிப்பது பாதுகாப்பானதல்ல. எனவே, அவர்களுக்கு அரசு செலவில் வேறு வீடு கட்டித் தர வேண்டும். மேலும், ராஜலட்சுமியின் சகோதரிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தலித் மக்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தால் வழங்கப்படும் நிதியைத் தவிர்த்து மாநில அரசும் 25 லட்ச ரூபாய் நிதி வழங்க வேண்டும்' என முதல்வரிடம் கூறியதாகத் தெரிவித்திருந்தார்.
இதன்பிறகு ஏழு பேர் விடுதலையில் ஆளுநருக்கு மீண்டும் அழுத்தம் கொடுப்பது உள்பட பல விஷயங்கள் பேசப்பட்டன.
கூடவே, 'ரவிக்குமாரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தமிழக உளப்பிரிவு மூலம் தகவல் கிடைத்துள்ளது. கர்நாடகத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டோர் அடுத்ததாக எழுத்தாளர் ரவிக்குமாரை கொலை செய்ய குறி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடர்புடையோர் அதற்கு முன்னர் நடந்த கோவிந்த் பன்சாரே, தபோல்கர், பேராசிரியர் கல்புர்கி கொலைகளுக்கு காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே, ரவிக்குமாருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதுதொடர்பாக ஏற்கெனவே மனு கொடுத்தும் தமிழக அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை' எனக் கூறியுள்ளனர்.
'அப்படியா..நான் ஏற்கெனவே இதுதொடர்பாக கூறிவிட்டேனே...விசாரிக்கிறேன்' எனக் கூறியிருக்கிறார் எடப்பாடி.
இதனையடுத்துப் பேசிய வி.சி.க முன்னணி நிர்வாகி ஒருவர், ' எச்.ராஜாவின் செயல்பாடுகள் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றன. ரவிக்குமாருக்கு மிரட்டல் விடுத்த அமைப்பின் பஞ்சாங்கம் ஒன்றை அவர் ரிலீஸ் செய்கிறார். பா.ஜ.கவுக்கு இடம் கொடுப்பதால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது' எனக் கூற, ' நாங்கள் சுயமாக முடிவெடுத்து செயல்படுத்தி வருகிறோம். யாருடைய பேச்சையும் கேட்பதில்லை' என பதில் கொடுத்திருக்கிறார்.
இதன்பிறகு, திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோருடன் தனியாக அமர்ந்து பேசினார் எடப்பாடி பழனிசாமி. அப்போது என்ன பேசப்பட்டது என்ற விவரத்தையும் இரண்டு தரப்புமே வெளியிடவில்லை.
-அருள் திலீபன்