நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இடைத்தேர்தல் வரும் என நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ' தேர்தல் நடக்காது என நம்புகிறார் ஸ்டாலின். அதனால்தான் தற்போது வரையில் அவர் தேர்தல் பணிகளில் வேகம் காட்டவில்லை' என்கின்றனர் தி.மு.க பிரமுகர்கள்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிகள் குறித்த விவாதம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. யாருடன் யார் கூட்டணி என்பது இன்னும் வரையறை செய்யப்படவில்லை.
தி.மு.க, காங்கிரஸ் அணிக்குள் யார் இருப்பார்கள் என்பதும் முடிவாகவில்லை. இந்நிலையில், 20 தொகுதிகளுக்கான தேர்தல் வேலைகள் களைகட்டத் தொடங்கிவிட்டன.
இந்தத் தொகுதிகளில் எல்லாம் இரட்டை இலை சின்னத்தை வரையும் வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 20 தொகுதிகளிலும் உள்ள கிராமங்களுக்குச் சென்று தேர்தல் வேலைகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர் அதிமுகவினர்.
'உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?' என்ற கேள்வியோடுதான் வாக்காளர்களை அவர்கள் அணுகுகின்றனர். 'எப்படியாவது வென்றாக வேண்டும்' என்ற முனைப்பில் முதல்வர் இருப்பதால், கட்சியின் சீனியர் நிர்வாகிகளும் தீவிரமாகக் களமிறங்கிவிட்டனர்.
தொகுதிகளில் உள்ள கோயில்கள், ரசிகர் மன்றங்கள், எதிர்க்கட்சிகள் என அனைத்து தரப்பினரையும் பணத்தால் வளைத்து வருகின்றனர். இதனை அறிந்து அப்செட்டில் இருக்கிறார் ஸ்டாலின்.
மாவட்ட நிர்வாகிகள் பலரும் விலைபோய்விட்டதை அறிந்து அதிர்ச்சியில் இருக்கிறார்.
பா.ஜ.கவில் உள்ள தன்னுடைய ஆதரவாளர்கள் மூலம் தேர்தலை நிறுத்துவதற்கான வேலைகளையும் அவர் தொடங்கியிருக்கிறார்.
அவர்கள் கொடுத்த நம்பிக்கையில், 'இந்த 20 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்பு இல்லை' என உறுதியாக நம்புகிறார் ஸ்டாலின். காரணம், 'நாடாளுமன்றத் தேர்தலோடுதான் 20 தொகுதி தேர்தலையும் நடத்துவார்கள்; அதுவரையில் தேவையில்லாமல் பணத்தை செலவழிக்க வேண்டாம்' என நினைக்கிறார்.
ஆனால், எடப்பாடி பழனிசாமியின் கணக்கு வேறாக இருக்கிறது. ' நாடாளுமன்றத் தேர்தலை வலுவாக எதிர்கொள்வதற்கு 20 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியது அவசியம். அப்போதுதான் எம்.பி தேர்தலில் இன்னும் உற்சாகமாகத் தொண்டர்கள் வேலை பார்ப்பார்கள். தேர்தல் நடக்காது என ஸ்டாலின் நம்பிக் கொண்டிருக்கிறார்.
அதை நடத்துவதா..வேண்டாமா என முடிவு செய்ய வேண்டிய இடத்தில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு இருக்கிறது. கட்டாயம் தேர்தல் நடக்கும். ஆளும்கட்சி அனைத்து இடங்களிலும் வெல்லும். தி.மு.க மண்ணைக் கவ்வும்' என நம்பிக்கையோடு இருக்கிறார் முதல்வர்.
'ஆர்.கே.நகர் போல இன்னொரு தோல்வி வந்துவிட்டால் அது ஸ்டாலின் தலைமையை கேள்விக்குள்ளாக்கிவிடும். அதுகுறித்த எந்தவொரு அச்சமும் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அவருடன் இருப்பவர்களால்தான் இதுபோன்ற மனநிலைக்கு ஆள்பட்டிருக்கிறார் ஸ்டாலின். இது கட்சியின் வளர்ச்சிக்கு நல்லதல்ல' என்கின்றனர் கழகத்தின் தொண்டர்கள்.
-அருள் திலீபன்