சசிகலாவால் ஸ்டாலினுக்குத்தான் பாதிப்பு! - மோடி வகுத்த எதிர்ப்பு வியூகம் Exclusive

BJP not to join hands with AMMK

Nov 19, 2018, 15:45 PM IST

இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தினகரனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. ` சசி அண்ட் கோவுடன் பா.ஜ.க நெருங்கி வருகிறது என அவதூறு பரப்புகிறார்கள். அவர்களோடு எந்தக் காலத்திலும் இணையப் போவதில்லை' எனக் கிண்டடிக்கின்றனர் தமிழக பா.ஜ.கவினர்.

டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில், இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் தரகர் சுகேஷ் சந்திரசேகர், தினகரன் உதவியாளர் ஜனா, தினகரன் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டில் ஆர்.கே.நகர் தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு 50 கோடி ரூபாய் அளவுக்குக் கொடுக்க முயன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார் தினகரன்.

பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் தினகரன் பெயர் இடம்பெறவில்லை. இரண்டாவது குற்றப் பத்திரிகையில் அவர் பெயர் இடம்பெற்றிருந்தது.

இதனையடுத்து, குற்றப் பத்திரிகையில் இருந்து தன்னுடைய பெயரை நீக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் தினகரன். இதை நிராகரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் எனக் கூறியது. இந்த அதிர்ச்சியை தினகரனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இதுதொடர்பாக ட்விட்டரில் தினகரன், 'சிலரது சதியின் காரணமாக, இரட்டை இலையைப் பெற லஞ்சம் கொடுத்ததாக என் மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து என்னை விடுவிக்கச் சொல்லி நான் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி, இது பொய் வழக்குதான் என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன்' எனப் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாகப் பேசும் பா.ஜ.க புள்ளிகள், பா.ஜ.க தலைமை, தங்களிடம் நெருங்கி வருகிறது என தினகரன் தரப்பில் உள்ளவர்கள் பேசி வருகின்றனர். அதிலும், குறிப்பாக டாக்டர்.வெங்கடேஷ் தரப்பினர்தான் இவ்வாறு பேசி வருகின்றனர். 'ஆர்.கே.நகர் தேர்தலுக்குப் பிறகு உண்மையான அ.தி.மு.க, சசிகலா பக்கம்தான் இருக்கிறது. எனவே, எங்களோடு கூட்டணி வைக்கவே பா.ஜ.க விரும்புகிறது' என அதிமுக தொண்டர்களை ஏமாற்றி வருகின்றனர்.

எந்தக் காலத்திலும் தினகரன் அணிக்கு ஆதரவாக பா.ஜ.க இருக்கப் போவதில்லை. மோடி எதிர்ப்பு வாக்குகள் எல்லாம் தி.மு.க, காங்கிரஸ் பக்கம் போகாமல், தினகரன் உள்பட நான்கு துண்டுகளாக சிதறவே பா.ஜ.க விரும்புகிறது. அப்படிச் சிதறினால் திமுக, காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு பாதிக்கும். இதைத்தான் மோடி விரும்புகிறார்.

அப்படியிருக்கும்போது, சசிகலா குரூப்போடு எந்தவகையில் சமரசம் நடக்கும்? அதற்கான வாய்ப்புகளே இல்லை. தினகரனால் பாதிக்கப்படப் போவது தி.மு.கதான். நாங்கள் அல்ல. 2019 தேர்தல் முடியும் வரையில் சசிகலா குரூப்போடு சமரசம் ஆவதற்கு வாய்ப்பில்லை' எனச் சொல்லி சிரிக்கின்றனர்.

-அருள் திலீபன்

You'r reading சசிகலாவால் ஸ்டாலினுக்குத்தான் பாதிப்பு! - மோடி வகுத்த எதிர்ப்பு வியூகம் Exclusive Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை