சாதி ஆணவத் திமிரை எந்த வடிவிலும் தி.மு.க. ஆதரிக்காது: சீமானுக்கு ஸ்டாலின் பதில்

MK Stalin condemns Krishnagiri Honour Killing

by Mathivanan, Nov 20, 2018, 15:59 PM IST

சாதி ஆணவத் திமிரை எந்த வடிவிலும் தி.மு.க. ஆதரிக்காது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

ஆணவக் கொலைகள் குறித்து 'ஏன் இவ்வளவு கள்ள மௌனம்?!' - திராவிடக் கட்சிகள் மீது பாய்ந்த சீமான்

கிருஷ்ணகிரி சாதி ஆணவக் கொலைகளை திராவிட கட்சிகள் கண்டிக்கவில்லை என சீமான் சாடியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின்

அன்பு உடன்பிறப்புகளே, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆக்கிரமித்து வந்த சாதி  அடக்கு-ஒடுக்குமுறைகளை ஒரு நூற்றாண்டு   காலத்தில் அப்படியே புரட்டிப்  போட்டு, சமூக நீதியை நிலைநாட்டிய திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் அமைப்பான நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாள் இன்று!

சர்.பிட்டி.தியாகராயர், டாக்டர் நடேசனார், டாக்டர் டி.எம்.நாயர், பனகல் அரசர் என நீதிக்கட்சியின் முன்னோடிகளை- நம் முன்னோர்களை நினைவு கூர்வதற்கான நாள்.

வகுப்புவாரி உரிமை எனப்படும்  இடஒதுக்கீடு, அதன் வாயிலாக கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் உரிமை, அறநிலையத்துறைச் சட்டம் வாயிலாக வழிபாட்டு உரிமைகள் மீட்பு, ஒடுக்கப்பட்ட-தாழ்த்தப்பட்ட மக்களின் நலன் காக்கும் உயர்வான சட்டங்கள், பெண்களுக்கு வாக்குரிமை, மருத்துவக் கல்வி பயில சமஸ்கிருதம் கட்டாயம் என்ற தடையை அகற்றி நம் குடும்பத்தாரும் டாக்டர் ஆவதற்கான வாய்ப்பளிப்பு என அனைத்தையும் சமூக நீதிக்  கண்ணோட்டத்தில் செயல்படுத்தியது நீதிக்கட்சி அரசாங்கம்.

ஆங்கிலேயர் ஆட்சியில் மிகக்குறைந்த அதிகாரங்கள் மட்டுமே கொண்ட இரட்டை ஆட்சி முறையில், சமூக சீர்திருத்தத்திற்கான இத்தனை சாதனைகளையும் நிறைவேற்றியது நீதிக்கட்சி எனும் திராவிட அரசியல் இயக்கம். அதன் தொடர்சியாகத்தான் திராவிட இயக்கத்தின் முப்பெரும் தலைவர்களான தந்தைபெரியார்-பேரறிஞர் அண்ணா-தலைவர் கலைஞர் ஆகியோர் சமூக நீதிக் கொள்கையால் சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர்.

பெருமையுடன் இதனை நினைவில் ஏந்த வேண்டிய இந்நாளில், தமிழ்நாட்டின் தற்போதைய நிலவரம் மனதுக்கு இதம் தருவதாக இல்லை; மாறாக இடர் நிறைந்ததாகவே இருக்கிறது.

கஜா புயலினால் டெல்டா மாவட்டங்கள் உள்பட பல பகுதிகளும் கொடூரமாகப் பாதிக்கப்பட்டு, உயிரிழப்புகள் தொடரும் வேதனையான நிலையில், சாதிப் புயலும் சேர்ந்து வீசி இரு இளம் உயிர்களை அநியாயமாகப் பறித்திருக்கும் கொடுமையான நிகழ்வு இதயமுள்ள அனைவரையும் கலங்கடிக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூருக்கு அருகேயுள்ள சூடகொண்டபள்ளியைச் சேர்ந்த இளைஞர் நந்தீஷ்-இளம்பெண் சுவாதி ஆகிய இருவரும் சட்டப்படியான திருமண வயதை எட்டிய நிலையில், சாதி ஏற்றத்தாழ்வுகள் பற்றிக் கவலைப்படாமல் மனதால் ஒன்று கலந்து, திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்கள் இருவரும் கடத்தப்பட்டு, சித்ரவதைகளுக்குள்ளாகி, கைகள்  கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு, கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் சிவனசமுத்திரம் பகுதியில் காவிரி ஆற்று நீரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள செய்தி, தமிழ்நாட்டையே பதற வைத்துள்ளது.

இந்த இரட்டைக் கொலை தொடர்பாக பெண்ணின் தந்தை, பெரியப்பா உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களும் அவர்களின் சமூகத்தைச் சார்ந்தோரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 

பெற்று - வளர்த்து - தாலாட்டி - சீராட்டி - பாசம் பொழிந்து -அதே பாசத்தை தன் மீதும் காட்டிய மகளை, தானே முன்னின்று கொலை செய்கிற கொடுமை நடக்கிறதென்றால், இந்த மண்ணில் மனித உறவுகளைவிட, மனிதாபிமான உணர்வைவிட, பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா என்ற வேதனை மிகுந்த கேள்வி எழுகிறது.

எந்தப் பெற்றோரும் தன் மகள் நல்ல வாழ்க்கை வாழவேண்டும் என்றுதான் விரும்புவர். இளம்பெண் சுவாதி தன் மீது அன்புகொண்ட துணையாக இளைஞன் நந்தீஷை விரும்பித் திருமணம் செய்த நிலையில், பெற்றோருக்கு அதில் மனமாச்சரியங்கள் இருந்தால் அது குறித்துப் பேசித்  தீர்வு கண்டிருக்கலாம். சட்டம் தந்துள்ள வழிகளின்படி செயல்பட்டிருக்கலாம்.

ஆனால், சட்டத்தை மீறி, சாதி ஆணவத்துடன் பெற்ற மகளையும் அவரது கணவரையும் தீர்த்துக் கட்டுவது என்பது மன்னிக்கமுடியாத மாபெரும் குற்றம்.

அண்மைக்காலமாக இத்தகைய கொடூரக் குற்றங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடப்பது பெரும் துன்பத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

2016ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் அவர்கள் வழங்கிய தீர்ப்பில், தமிழ்நாட்டில் 47 ஆணவக் கொலைகள் நடந்திருப்பதைச் சுட்டிக்காட்டி வேதனையை வெளிப்படுத்தியதுடன்,  அவற்றைத் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் எடுத்துரைத்துள்ளார்.எனினும், ஆட்சியில் இருப்பவர்கள் இதன் மீது கவனம் செலுத்தாதது மட்டுமின்றி, தமிழ்நாட்டில் இத்தகைய சாதி வெறிக் கொலைகள் நடப்பதில்லை என்று முழுப் பூசணிக்காயை  இலைச்சோற்றில் மறைக்கும் வகையில் அறிக்கைகளும் பேட்டிகளும் தருவது வாடிக்கையாகிவிட்டது.

அதனால் சாதி ஆணவக்காரர்கள் வெறிபிடித்து ஆடி வருவது தொடர் நிகழ்வாகி வருகிறது.

நல்லிணக்கம் நிலவும் அமைதிப் பூங்காவான தமிழகத்தில் சாதி வெறி அரிவாள்கள் ரத்தப் பசியுடன் அலையும் போக்கு அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது; அனுமதிக்கவும் கூடாது.

இந்த  மண், அறிவால் பண்படுத்தப்பட்ட மண். இங்கே அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் சாதி வெறி தலைவிரித்தாடுவது பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அய்யன் திருவள்ளுவரில் தொடங்கி, சாதிப் பாகுபாடுகளைக் கடந்த ஆன்மிக நெறியை வலியுறுத்திய சித்தர்கள் வழியில், ‘கண்மூடிப் பழக்கங்கள் மண் மூடிப்போகும்’படி சாடிய வள்ளலார் நெறியும், சமத்துவம் போற்றிய வைகுண்டர் வழியும், ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற மகாகவி பாரதியின் வரியும், ’இருட்டறையில் உள்ளதடா உலகம்-சாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே’ என்ற பாவேந்தர் பாரதிதாசனின் எழுத்தும் இந்த மண்ணின் பெருமைகள்.

அந்த உயர்ந்த பண்பாட்டு வழி பாடுபடுவதுதான் திராவிட இயக்கம்.

இந்தியாவில் வேறெங்கும் ஏற்படாத சமுதாய மறுமலர்ச்சி தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தினால் ஏற்பட்டது. அந்த புரட்சிகர மாற்றத்திற்கு இத்தகைய சாதி ஆணவக் கொலைகள் மூலமாக சவால் விடுக்கப்படுகிறது. உயர்சாதிக் கொடுமையைத் தகர்த்தெறிந்த மண்ணில், நீட் தேர்வு மூலமாக மீண்டும் மனுநீதியும்-வருணாசிரமும் உள்ளே நுழையப் பார்க்கிறது. அந்த ஆபத்தை அறிந்து செயல்பட வேண்டிய நேரத்தில், சாதி வெறி தலைக்கேறி இளம் உயிர்களைத் துடிதுடிக்கக் கொல்வது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்குச் சமமானதாகும்.

சாதி ஆணவத்திற்கு எதிராக முற்போக்கு சக்திகள்-சமூகநீதி இயக்கங்கள்-ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலை உயர்த்தும் அமைப்பினர் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இது ஒன்றிணைந்த-ஒருமித்த குரலாக சேர்ந்து ஒலிக்கும்போது, சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி, சாதியால் மக்களை பிளவுபடுத்துவோருக்கும் - சாதிவெறியால் பெற்ற பிள்ளைகளையே கொலை செய்வோருக்கும் தக்க பாடத்தைப் புகட்டும்.

திராவிட  முன்னேற்றக் கழகம் இத்தகைய சாதி வெறிப் படுகொலைகளைக் கண்டிப்பதில்லை என்றும்  கண்டுகொள்ளாமல் கடந்து செல்கிறது என்றும் சிலர் தேவையற்ற விமர்சனங்களை வைக்கிறார்கள்.

சாதி ஆணவத் திமிரை எந்த வடிவிலும் தி.மு.க. ஆதரிக்காது. சாதி பாகுபாடற்ற சமுதாயம் அமையவும், மனித வாழ்வின் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி தழைக்கவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம் தி.மு.கழகம். சாதிபேதமற்ற அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் விரும்பும் தமிழ்நட்டின் பெரும்பான்மை  மக்களின் பேராதரவுடன் தி.மு.கழகம் தேர்தலை வெற்றிகரமாக சந்திக்கும் என்று உறுதியாகச் சொல்வேன்.

அடுத்து வரும் தேர்தலில் தி.மு.கழகம் ஆட்சியமைக்கும்போது, சாதி வெறிக் கொலைகளைத் தடுக்கவும் அத்தகைய கொடூரங்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்கவும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உறுதியினையும் கழகத்தின் தலைவர் என்ற முறையிலும் கலைஞரின் மகன் என்ற முறையிலும் வழங்குகிறேன். 

சாதி ஏற்றத்தாழ்வற்ற மத வேறுபாடுகளற்ற தமிழ்நாட்டை  கட்டி அமைத்திட வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்துடன் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டதுதான் பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம். உயர்த்தப்பட்டவர்-தாழ்த்தப்பட்டவர் என்ற பாகுபாடின்றி அனைத்து சமூகத்தினரும் ஒரே இடத்தில் ஒற்றுமையுடன் வாழும் வகையில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சமத்துவபுரங்கள் கட்டப்பட்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கலைஞர் தலைமையிலான தி.மு.கழக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சர்-துணை முதல்வர் என்ற பொறுப்புகளை வகித்து பல சமத்துவபுரங்களைத் திறந்து வைத்துள்ளேன்.

கலைஞரின் உயர்ந்த இலட்சியமான  பெரியார் நினைவு சமத்துவபுரம் என்பது தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணி.

சாதி  வெறியையும் ஆணவத்தையும் அகற்றி, மக்கள் மனங்களில் சமூக நீதியை விதைத்து, நல்லிணக்கத்தை வளர்த்து, தமிழ்நாடே சமத்துவபுரமாகப் பூத்துக்குலுங்கும் உன்னதத்தை உருவாக்கிட-தடைகள் பல கடந்து தயங்காமல் பணியாற்றிட சமூக நீதி காத்த நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாளில் சூளுரைப்போம்! கலைஞரின் உடன்பிறப்புகளே.. உங்களில் ஒருவன் அழைக்கிறேன். களப்பணி  ஆற்றுவோம். ஆணவப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மனித மனங்களை வெல்வோம்;. சாதி வெறி ஒழித்து, பெரியார் நினைவு சமத்துவபுரங்களை பெருமிதத்துடன் மலரச் செய்திடுவோம்!

இவ்வ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

You'r reading சாதி ஆணவத் திமிரை எந்த வடிவிலும் தி.மு.க. ஆதரிக்காது: சீமானுக்கு ஸ்டாலின் பதில் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை