கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட வேண்டும் என்று மக்கல் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் கூறியதாவது:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 30% சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகம் போதுமானது அல்ல.
ஆகையால் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். கஜா புயலால் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் எடப்பாடி பார்வையிட்டது தூரத்து பார்வைதான்.
பிரதமர் மோடி பாதிப்புக்குள்ளான இடங்களை நேரில் பார்வையிட வேண்டும். மனிதாபிமானம் கருதி இங்கே மோடி வர வேண்டும்.
பிரதமர் மோடி வந்து பார்வையிட்டால் இங்கே அரசு சக்கரம் இன்னமும் வேகமாக சுழலும். சிமெண்டில் அமைக்கப்பட்ட மின்கம்பம் கூட சேதமடைந்துள்ளது; சிமெண்டில்கூட குறை இருந்திருக்கலாம்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.