நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து துரைமுருகன் பேசிய பேச்சுக்கள், வைகோவுக்கும் திருமாவளவனுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன. முதல்வராகும் எண்ணத்தில் துரைமுருகன் செயல்படுவதாகவே பார்க்கத் தோன்றுகிறது' என்கின்றனர் நிலவரத்தைக் கவனித்து வருபவர்கள்.
திமுக பொருளாளர் துரைமுருகன், தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுடன் கொள்கை அளவில் ஒத்துப் போய் இருந்தாலும் அவைகள் கூட்டணியில் இருப்பதாக அர்த்தம் இல்லை எனப் பேசியிருந்தார். இந்தப் பேச்சு முன்னாள் மக்கள் நலக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
'ஸ்டாலின் சொல்லாமல் துரைமுருகன் பேச மாட்டார். திட்டமிட்டே நம்மைக் கழட்டிவிடப் பார்க்கிறது திமுக' என ஆவேசப்படுகின்றனர்.
இதைப் பற்றிப் பேசும் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளும், '' ஸ்டாலினுக்குத் தவறான ஆலோசனைகளைச் சொல்லிக் கெடுப்பதற்கென்றே சிலர் இருக்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் இலவச ஆலோசனைகளால்தான் இப்படியெல்லாம் சிலர் பேசுகின்றனர். பாஜக அரசின் நடவடிக்கையால் இந்தியா முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரும் தேர்தலில் பாஜகவிடம் இருந்து மக்களை மீட்டெடுப்பதற்கான பணிகளில் திருமாவளவன் ஈடுபட்டு வருகிறார். திமுகவுக்குப் பதில் சொல்லாமல் திருமாவளவன் நேரடியாக டெல்லி செல்வதும் ராகுல்காந்தி, முகுல் வாஸ்னிக் ஆகியோருடன் பேசுவதையும் திமுகவினர் கடுப்புடன் கவனித்து வந்தனர். இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் சிறுத்தைகளையும் மதிமுகவையும் கழட்டிவிடப் பார்க்கின்றனர். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். எங்கள் வலிமையை திமுக புரிந்து கொள்ளும்'' என்கின்றனர்.
மேலும்
, ''நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரும் எனத் தொடர்ந்து பேசி வருகிறார் துரைமுருகன். மீண்டும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக எம்எல்ஏக்களே தயாராக இல்லை. துரைமுருகனின் விருப்பத்துக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக தேவர் சமூகமும் கவுண்டர் சமூகமும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட்டது.
பெரும்பான்மை சமூகமாக இருக்கும் வன்னியர்கள் இன்னும் அதிகார பீடத்தில் அமரவில்லை. வரும் காலங்களில் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெறும் என அரசியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இந்த சூழலில் திமுக அணிக்குள் ராமதாஸைக் கொண்டு வருவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார் துரைமுருகன். இதன்மூலம், தேர்தலில் வடமாவட்டங்களில் அதிக இடங்கள் கிடைத்துவிட்டால், அதன்மூலம் வன்னியர்கள் நாடாள்வதற்கு வாய்ப்பு வந்து சேரும் எனக் கணக்கு போடுகிறார்.
'நண்டு நாற்காலி ஏறப்பார்க்கிறது' என முன்பு கருணாநிதி கூறியதையும் இதனோடு தொடர்புபடுத்திப் பார்த்தால் புரியும். நான் முதல்வர் பதவிக்கு இணையானவன் எனத் தொடர்ந்து பேசி வருகிறார் துரைமுருகன். அவரது நோக்கத்தைப் புரிந்து கொண்ட திமுக நிர்வாகிகள், ஸ்டாலின் காதில் போட்டு வைத்துள்ளனர். ஆகையால் டிகேஎஸ்.இளங்கோவனுக்கு ஏற்பட்ட நிலை, துரைமுருகனுக்கும் வரலாம்'' என்கின்றனர்.
-அருள் திலீபன்