காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி அளித்ததை திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
மேகதாது அணையை கட்டுவதில் கர்நாடகா தீவிரம் காட்டி வந்தது, தற்போது மேகதாது அணைக்கான கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கஜா புயலால் காவிரி டெல்டா உருக்குலைந்து கிடக்கும் நிலையில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் மத்திய அரசின் நடவடிக்கை இருக்கிறது என்பது தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்து. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டினால் தமிழகத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவர். மேகதாது குறித்த தமிழகத்தின் கருத்துகளை மத்திய நீர்வளத்துறை கருத்தில் கொள்ளவில்லை.
மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் கொடுத்திருக்கும் சுற்றுச் சூழல் அறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.