அத்தை மகனை திருமணம் செய்த வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்த மறைந்த குருவின் மகள் விருதாம்பிகை காடுவெட்டி கிராமத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி காடுவெட்டி குரு மகள் மனு அளித்துள்ளார்.
காடுவெட்டி குரு மறைவுக்குப் பின்னர் அவரது பெயரில் உறவினர்கள் அறக்கட்டளை தொடங்க முயற்சித்தனர். ஆனால் காடுவெட்டி கிராம மக்கள், பாமக நிறுவனர் ராமதாஸை மீறி யாரும் செயல்பட அனுமதிக்க முடியாது என கூறிவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் தமது தாய் லதாவை உறவினர்கள் கடத்தி வைத்திருப்பதாக குற்றம்சாட்டினார்.
ஆனால் தாய் லதாவை கனலரசன் அடித்து உதைத்தார் என பாமக தரப்பில் ஒரு விளக்கம் தரப்பட்டது. இந்த நிலையில் காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிக்கை அத்தை மகன் மனோஜை நேற்று திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தில் காடுவெட்டி குருவின் மகள் லதா பங்கேற்கவில்லை.
திருமணம் முடிந்த கையோடு காடுவெட்டி குருவின் சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினர். பின் சொந்த ஊரான காடுவெட்டிக்கு சென்ற போது ஊரார் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் விருதாம்பிகையுடன் யாரும் பேசக் கூடாது எனவும் ஒதுக்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து தங்களது குடும்பத்துக்கு பாதுகாப்பு கோரி கும்பகோணம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மணக்கோலத்தில் காடுவெட்டி குரு மகள் மனு அளித்தார். காடுவெட்டி குரு மருத்துவமனையில் இருந்த போதே சென்னை இளைஞர் ஒருவரை விருதாம்பிக்கைக்கு திருமணம் செய்து வைக்க பாமக நிறுவனர் ராமதாஸ் முயற்சித்தார் எனவும் அதை மீறியே இந்த திருமணம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.