லோக்சபா தேர்தல் தொடங்குவதற்குள் திமுக அணியை ஆட்டுவிக்கும் காரியங்கள் கச்சிதமாக நடந்து வருகின்றன. ' வடக்கு மாவட்டங்களில் நாமே வலிமையாக இருக்கிறோம். திருமாவளவனை ஏன் தூக்கிக் கொண்டு திரிய வேண்டும்' என முன்னாள் அமைச்சர் குறிஞ்சிப்பாடி எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாகச் சொல்கின்றனர் சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள்.
டெல்லியில் முதன்முதலாக ராகுல்காந்தியை சந்தித்துக் கூட்டணி குறித்து திருமாவளவன் பேசியதில் இருந்தே, அவரை ஒதுக்கி வைக்கும் வேலைகளைத் திமுகவினர் தொடங்கிவிட்டனர். ' கூட்டணிக்குத் தலைமை தாங்குவது நாம்தான். இவர் ஏன் போய் பேச வேண்டும்? கூட்டணியை உறுதிப்படுத்துவதாக பேட்டி அளிக்க வேண்டும், நாம் இல்லாவிட்டால் இவர்களால் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியாது. சட்டமன்றத் தேர்தலில் திருமாவளவனால் ஒரு சதவீத ஓட்டுக்களைக்கூட வாங்க முடியவில்லை. 0.70 சதவீதம்தான் வாங்கினார். எந்த செல்வாக்கும் இல்லாமல் ராகுல்காந்தியை பார்க்கிறார். அவர்களும் இவரை வரவேற்கின்றனர்' என திமுக பொறுப்பாளர்கள் பொருமிக் கொண்டிருந்தனர்.
இதனை ஸ்டாலின் கவனித்து வந்தாரே தவிர, எந்தப் பதிலும் சொல்லவில்லை. இதன் பிறகும் தேசம் காப்போம் மாநாடு என்ற பெயரில் தலைவர்களைப் பார்க்கக் கிளம்பினார் திருமாவளவன். இந்த சந்திப்புகளும் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்தக் கோபத்தை எல்லாம் துரைமுருகன் மூலமாக வெளிப்பட வைத்தனர். கூட்டணிக்குள் குண்டு வைத்துவிட்டார்கள் என்பதை அறிந்து ஸ்டாலினிடம் சந்திப்புக்குத் தூதுவிட்டனர் சிறுத்தைகள். அவரும், துரைமுருகன் அப்படியென்ன தவறாகப் பேசிவிட்டார். அசெம்பிளி தேர்தலில் எங்களுடன் இருந்தவர்களைப் பற்றித்தானே அவர் குறிப்பிட்டார் என விளக்கமும் கொடுத்தார்.
இந்த சம்பவங்களுக்குப் பிறகு மீண்டும் சிறுத்தைகள் நெருங்கி வந்ததை, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்பட வன்னிய மாவட்ட செயலாளர்கள் விரும்பவில்லை. அவர்கள் நேரடியாக ஸ்டாலினிடமே கோபத்தைக் காட்டிவிட்டனர்.
'இவர்கள் தயவு நமக்கு எந்தக் காலத்திலும் தேவையில்லை. திருமாவளவன் இல்லாமலேயே நாம் வெற்றி பெற்றுவிடுவோம். நம்முடைய தனிப்பட்ட செல்வாக்கை, அவர்களுக்குக் கொடுக்க வேண்டுமா? முன்பு ஒருமுறை ஒரு சீட் கொடுத்ததற்காக அறிவாலயத்தில் அந்தக்கட்சி ஆட்கள் தீக்குளிப்பு முயற்சியில் இறங்கினர். இதனால் வேறுவழியில்லாமல் ரவிக்குமாருக்குத் திருவள்ளூர் தொகுதியை தண்டமாகக் கொடுத்தனர்.
அதிலும் அவர் தோற்றுத்தான் போனார். இப்போது கூட்டணிக்கே நான்தான் காரணம் எனச் சொல்லி அதே 2 சீட்டுக்கு வந்து நிற்பார். இது நமக்குத் தேவையா? அவரைக் கழட்டிவிடுங்கள். அவர் இருந்தால் வரவேண்டிய ஓட்டுக்களும் வந்து சேராது' எனப் பேசியிருக்கிறாராம் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
துரைமுருகனைத் தொடர்ந்து எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் இவ்வாறு பேசி வருவதை அதிர்ச்சியோடு கவனித்துக் கொண்டிருக்கிறார் திருமாவளவன்.