வைபை, ஏசி, சிசிடிவி கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்ட சென்னை - மதுரை இடையே சொகுசு தேஜஸ் ரயில் விரைவில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில் பெரும்பாலும் மின்சார ரயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் தயாரிக்கப்படுகிறது. இதை தவிர அதிவேகத்தில் செல்லக்கூடிய ரயில்களும் அதிநவீன வசதிகள் கொண்ட சொகுசு ரயில்களும் தயாரிக்கப்படுகிறது.
அந்த வகையில், தேஜஸ் எனப்படும் அதிநவீன வசதிகள் கொண்ட சொகுசு ரயில் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. முதலாவது தேஜஸ் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு மேற்கு ரயில்வேக்கு வழங்கப்பட்டது. இந்த ரயில், மும்பை - கோவா இடையே கடந்த ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருவதை அடுத்து, 2வது தேஜஸ் ரயிலுக்கான பெட்டிகள் தயாரிக்கும் பணியில் ஐசிஎப் ஈடுபட்டது. இந்தப் பணி முடிவடைந்ததை அடுத்து, நேற்று ஐசிஎப் பொது மேலாளர் சுதான்சி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த 2வது தேஜஸ் ரயில் வடக்கு ரயில்வேக்கு வழங்க ஆலோசிக்கப்பட்டு வந்த நிலையில், தெற்கு ரயில்வேயில் ரயில்களின் தேவை இருந்ததால் தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த தேஜஸ் ரயில் சென்னை டூ மதுரை இடையே முதற்கட்டமாக பகல் நேரத்தில் மட்டும் இயக்கப்படுகிறது. ஒரு வாரத்தில் ரயில் ஓடத்தொடங்கும் நிலையில், விரைவில் அதற்கான தேதி, நேரம் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் முழுவதும் ஏசி வசதி கொண்ட தேஜஸ் ரயிலில் ஜிபிஎஸ் கருவி, எல்இடி விளக்குகள், வைபை வசதி, சிசிடிவி கண்காணிப்பு கேமரா, தானியங்கி கதவுகள், கணிணிகள் உள்பட அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பார்க்கவே அழகாக காட்சியளிக்கும் தேஜஸ் ரயில் சென்னை டூ மதுரை இடையே 497 கி.மீ., பயண தூரத்தை 7 மணி நேரத்தில் சென்றடையும். இது மற்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயில், பாண்டியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களின் பயண நேரத்தைவிட தேஜஸ் ரயிலின் பயண நேரம் குறைவாகும்.
சென்னை எழும்பூரில் காலை 6 மணிக்கு புறப்படும் தேஜஸ் ரயில் மதியம் 1 மணிக்கு மதுரை சென்றடையும் என்றும், ஆனால், சதாப் ரயிலைவிட 20 சதவீதம் கட்டணம் அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்த ரயில், தற்போது வில்லிவாக்கம் ரயில்வே யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.