தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் என்று தாம் நம்புவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
2009-ம் ஆண்டு இலங்கை அரசுடனான இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதத்தை மவுனித்தனர். இதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் இயக்கம் தமது செயல்பாடுகளை கைவிட்டது.
அதேநேரத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், யுத்தத்தில் கொல்லப்பட்டதாக ஒரு உடலை இலங்கை ராணுவம் காட்டியது. ஆனால் பிரபாகரன் ஆதரவாளர்கள் இதை நிராகரித்து வருகின்றனர்.
அண்மையில் சிங்கள ஏட்டுக்கு பேட்டியளித்த கருணா, விடுதலைப் புலிகளின் புலனாய்வு பொறுப்பாளர் பொட்டு அம்மான் நார்வே நாட்டில் உயிருடன் இருக்கிறார் என கூறியிருந்தார். இந்த நிலையில் தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலர் வைகோ, பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தாம் உணர்வுப்பூர்வமாக நம்புவதாக தெரிவித்தார்.
மேலும் கோடியக்கரை கடலில் இறங்கி பிரபாகரனின் கனவை நனவாக்குவேன் என தாம் சபதமிட்டேன்.. அப்போது தலைவர் அவர்களே! என பிரபாகரனை குறிப்பிட்டேன். என்னைப் பொறுத்தவரையில் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றே நம்புகிறேன். இதில் விவாதிக்க எதுவும் இல்லை என திட்டவட்டமாக கூறினார்.