’தன்மானத்துக்கே இழுக்கு' என தேமுதிகவைக் கடுமையான வார்த்தைகளில் கரித்துக் கொட்டினார் ஆ.ராசா. சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் பேரம் பேசிக் கொண்டே கருணாநிதியை ஏமாற்றினார் விஜயகாந்த். இதில் அதிகம் ஏமாந்தது சபரீசன்தான்.அந்தக் கோபத்தை ஆ.ராசா மூலமாகத் தீர்த்துவிட்டாராம்.
'கொள்கைரீதியாக ஒத்து வரக் கூடிய கட்சிகளுடன் தோழமையுடன் இருக்கிறோம். எங்கள் கூட்டணியில் அவர்கள் இல்லை' என விசிகவுக்கும் வைகோவுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் துரைமுருகன்.
இந்தப் பேட்டி உருவாக்கிய பாதிப்பை, அடுத்த சில நாள்களில் சரிசெய்துவிட்டார் ஸ்டாலின். இப்போது திருமாவளவனும் வைகோவும் ஸ்டாலினுடன் ராசியாகிவிட்டனர்.
ஆனாலும், திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள ஆசைப்பட்ட டாக்டர் ராமதாஸுக்கும் பிரேமலதாவுக்கும் ஆ.ராசா பதில் கொடுத்திருந்தார். இப்படியொரு ஆவேசமான பதிலை பிரேமலதாவும் சுதீஷும் எதிர்பார்க்கவில்லை.
இதற்கான பின்னணி காரணம் பற்றிப் பேசும் திமுகவினர், ' மக்கள் நலக் கூட்டணிக்கு விஜயகாந்தைக் கொண்டு வரும் வேலைகளில் ஆர்வம் காட்டி வந்தார் வைகோ. அதேநேரம், திமுகவில் இருந்து சபரீசன் மூலமாக சுதீஷிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
என்னென்ன டிமாண்ட்...? என்பதையெல்லாம் தேமுதிக முன்வைத்தது. ' வைட்டமின் ப' தொடர்பான விஷயங்களுக்கு ஓ.கே சொன்ன கருணாநிதி, கேப்டன் முன்வைத்த துணை முதல்வர் பதவி, வலுவான ஐந்து துறைகளுக்கு அமைச்சர் பதவி போன்றவற்றால் புருவத்தைச் சுருக்கினார்.
காங்கிரஸ் கட்சி தயவில் மைனாரிட்டி ஆட்சி நடந்தபோதே கூட்டணி ஆட்சிக்கு சம்மதம் தெரிவிக்காதவர் கருணாநிதி. கேப்டனின் பேச்சுக்கு அவர் மயங்கவில்லை. ஒருகட்டத்தில், டிமாண்டுக்கு சம்மதிப்போம். தேர்தல் முடிந்தே பிறகு கல்தா கொடுப்போம் எனவும் முடிவு செய்தனர்.
இதையொட்டி சுதீஷிடம் பேசிக் கொண்டிருந்தனர். ஜெயலலிதாவை வீழ்த்த கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாது எனக் கருணாநிதியும் விஜயகாந்த்தை வரவேற்கக் காத்திருந்தார். இடையில் சசிகலா கணவர் நடராஜன் தூண்டுதலில் சில தொழிலதிபர்கள் கேப்டனை வளைத்துவிட்டனர்.
எத்தனை சி வேண்டும் என்றாலும் தருகிறோம் எனக் கடைசி வரையில் இலவு காத்த கிளியாக தவம் இருந்தார் சபரீசன். ஒருவரை எப்படி நம்ப வைத்து ஏமாற்றுவது என்ற வித்தையை பிரேமலதா குடும்பம் காட்டிவிட்டதை சபரீசனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அதேபோல், முதல்வர் வேட்பாளராக நின்று கொண்டு ஸ்டாலினுக்கே சவால்விட்டார் அன்புமணி. இந்த இருவரையும் கருவறுக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டுத்தான், ஆ.ராசா என்ற அஸ்திரத்தை ஏவினார் சபரீசன்' என்கின்றனர்.
- அருள் திலீபன்