தினகரனுக்கு கல்தா கொடுக்கும் தேமுதிக.. அதிமுக-பாஜக அணிக்கு தாவல்?- Exclusive

DMDK to join hands with AIADMK?

by Mathivanan, Dec 4, 2018, 13:13 PM IST

லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி முஸ்தீபுகள் நடந்து வருகின்றன. திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட்டுகள் எனப் பலம் பொருந்திய அணி உருவாகிவிட்டது.

இந்த அணியில் மேலும் சில கட்சிகள் இணையலாம் எனவும் பேச்சு கிளம்பியுள்ளது. தனித்துவிடப்பட்டுள்ள தேமுதிகவோ, 'எடப்பாடி பழனிசாமி, தினகரன், மோடி' என சாய்ஸ் போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசியல் சூழலில் திமுக தலைமையிலான அணியே கிளியராக இருக்கிறது. பாமக, தேமுதிக, அதிமுக, தினகரன், பாஜக ஆகிய கட்சிகள் எல்லாம் யாருடன் கூட்டணி சேரும் என்பது முடிவாகவில்லை.

அதிலும், 'திமுக அணிக்குள் தேமுதிக நுழைய வாய்ப்பே இல்லை' என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கொடுத்த பேட்டி, பிரேமலதாவைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது. கூட்டணி பற்றிப் பேசிய ராசா, ' தன்மானத்தை இழந்துவிட்டு தேமுதிக, பாமகவை அழைக்க முடியாது. துரைமுருகன் எதார்த்தமாக வெளிப்படுத்திய வார்த்தைகள் ஊடகங்களாலும், எதிர் முகாம்களில் உள்ளவர்களாலும் ஊதிப்பெரிதாக்கப்பட்டுள்ளன. கொள்கை வழியில் அமைந்துள்ள திமுக, மதிமுக, விசிக கூட்டணி தொடரும். ஒருவேளை துரைமுருகனுக்கு தனிப்பட்ட ஆசைகள் இருக்குமேயானால் அதற்கு திமுக துணைபோகாது' என்றார்.

இந்தக் கருத்துக்குக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் பிரேமலதா.

ஆனால், தேமுதிகவின் தேர்தல் நிலைப்பாடு பற்றிப் பேசும் அக்கட்சியின் தலைமை அலுவலக பொறுப்பாளர்கள், ' மக்கள் நலக் கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கிய திருமாவளவன், முதல்ஆளாக திமுக கூட்டணியில் துண்டு போட்டு சீட் பிடித்துவிட்டார். அவரைப் பின்தொடர்ந்து வைகோவும் சென்றுவிட்டார். திமுகவோடு எந்தக் காலத்திலும் சேர மாட்டோம் என ரோஷத்தைக் காட்டிய இரண்டு கம்யூனிஸ்ட்டுகளும், ஸ்டாலின் முதல்வர் எனப் பேசத் தொடங்கிவிட்டனர்.

மக்கள் நலக் கூட்டணிக்குள் இறுதியில் வந்த கேப்டனை இவர்கள் புறம் தள்ளுகிறார்கள். மக்களும் இவர்களைப் புறம் தள்ளுவார்கள் என ஆத்திரத்தை வெளிப்படுத்தினார் பிரேமலதா.

வரக் கூடிய லோக்சபா தேர்தலில் தினகரனோடு கூட்டணி சேருவதை முதல் சாய்ஸாக வைத்திருக்கிறோம். ஆர்.கே.நகர் தேர்தலிலேயே உள்ளூர் தேமுதிகவினர் தினகரனுக்காக வேலை பார்த்தனர். லோக்சபா தேர்தலில் அவரோடு கூட்டணி வைத்தால், பணம் வரும் என நினைக்கின்றனர். இரண்டாவதாக, மீண்டும் எடப்பாடி தங்களை அழைப்பார் என தலைமை நினைக்கிறது. அதிமுக, பிஜேபி கூட்டணி சேர்ந்தால் அதில் தேமுதிகவும் இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறது எனக் கேப்டன் குடும்பத்தினர் சொல்கிறார்கள்.

பிஜேபிக்கு எதிராக எந்தவித கடுமையான விமர்சனத்தையும் கேப்டன் முன்வைத்ததில்லை. இதையே ஒரு சிக்னலாகச் சுட்டிக் காட்டுகின்றனர். இப்படியொரு அணி அமைவதற்கே வாய்ப்பு அதிகம் என்கின்றனர் உறுதியாக.

You'r reading தினகரனுக்கு கல்தா கொடுக்கும் தேமுதிக.. அதிமுக-பாஜக அணிக்கு தாவல்?- Exclusive Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை