`எங்கள் அணியின் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின்' என திருச்சியில் இன்று நடந்து வரும் திமுகவின் தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் பேசியிருக்கிறார் சி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன். வைகோவும் இதே கருத்தைக் கூறிவிட்டார். திருமாவளவன் மட்டும் இப்படியொரு கருத்தை இதுவரையில் கூறவில்லை.
மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கிய கட்சிகளை மக்கள் திரும்பிக் கூட பார்க்கவில்லை.
அந்தநேரத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிபிஎம் கட்சியின் அருணனுக்கும் சீமானுக்கும் இடையில் பகிரங்க சண்டை நடந்தது. ஒருகட்டத்தில், உங்களைவிட அதிக வாக்குகளை எடுத்துக் காட்டுகிறேன் என சவால்விட்டார் சீமான்.
சொன்னதைப் போலவே, சிபிஎம் கட்சியைவிட அதிக வாக்குகளைப் பெற்றார். தேர்தல் வெற்றி தோல்வி கொடுத்த வருத்தத்தில் இந்த விஷயத்தை அனைவருமே மறந்துவிட்டனர்.
இதன்பிறகு சில காலம் அமைதியாக இருந்தவர்கள், தற்போது லோக்சபா தேர்தலுக்காக ஒன்று சேர்ந்துள்ளனர். இன்று திருச்சியில் நடைபெற்ற மேகதாது அணை விவகாரம் தொடர்பான திமுகவின் போராட்டத்தில்தான், இந்தச் செய்தியின் முதல் வரியில் உள்ள வரிகளைப் பேசினார் முத்தரசன்.
ஆர்.கே.நகர் தேர்தலின்போதுதான் திமுகவோடு ஐக்கியமானார் வைகோ. அதேநாள்களில், தமிழகத்தின் அடுத்த முதல்வர் தளபதிதான் என உணர்ச்சி பொங்க பேசினார்.
இப்போது மக்கள் நலக் கூட்டணியில் இருந்த கட்சிகள் பலவும் ஸ்டாலினை ஏற்றுக் கொண்டன. திருமாவளவன் மட்டும் மிஸ்ஸிங்.
இதைப் பற்றி உள்விவரம் அறிந்தவர்களிடம் விசாரித்தால், தகவல் வேறு மாதிரியாக வருகிறது. திமுக கூட்டணியில் இருந்தாலும் அந்தக் கட்சியில் உள்ள துரைமுருகன், குறிஞ்சிப்பாடி பன்னீர்செல்வம், பொன்முடி உள்ளிட்டவர்களை சந்தேகத்துடன்தான் பார்க்கிறார் திருமா.
ஒரே சீட், அதுவும் சிதம்பரம் தொகுதியை மட்டும் கொடுத்துவிட்டு காவு வாங்கிவிடுவார்கள் எனவும் பயப்படுகிறார். குறைந்தபட்சம் 2 சீட்டாவது வேண்டும் என எதிர்பார்க்கிறார்.
திமுகவினரோ, உங்களுக்கெல்லாம் ஒரு சீட்டே அதிகம் என திருமாவை ஏளனத்தோடு பார்க்கின்றனர்.
'தன்னுடைய சுயமரியாதைக்கு பங்கம் வராத அளவுக்கு ஸ்டாலின் நடந்து கொண்டால், முதல்வர் அவர்தான் என அறிவிக்கலாம். அதுவரையில் என்னுடைய வாயில் இருந்து அந்த வார்த்தைகள் வராது' என உறுதியாகப் பேசிவிட்டார். அதனால்தான், வைகோவும் முத்தரசனும் வலியுறுத்திச் சொல்லும் முதல்வர் என்ற வார்த்தையைச் சொல்ல மறுக்கிறார் திருமாவளவன். தேர்தல் முடிவில் கூட்டணி ஆட்சி மலரும் என திருமாவளவன் நம்புவதும் மற்றொரு காரணம்' என்கின்றனர் ஆச்சரியத்துடன்.
'இந்த அணியை பலவீனப்படுத்த பிஜேபியும் ஆர்எஸ்எஸ்ஸும் முயற்சிக்கின்றன' எனவும் திருச்சி கூட்டத்தில் பேசினார் திருமாவளவன். பலவீனப்படுத்துவது திருமாவா...ஸ்டாலினா என்ற பட்டிமன்றமும் களைகட்டத் தொடங்கியிருக்கிறது.
- அருள் திலீபன்