ஜெயலலிதா நினைவு தினத்தில் அவரது ஆளுமையை நினைத்து அழுதனர் சசிகலா குடும்ப கோஷ்டிகள். ஆறுமுகசாமி கமிஷனின் விசாரணைப் போக்கை நினைத்துத்தான் கவலைப்படுகின்றனர் சசிகலா கோஷ்டிகள்.இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது டாக்டர்.சிவக்குமார்தான்.
அப்பல்லோ மருத்துவமனையில் 2016 டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா இறந்ததாக, மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அம்மா எப்போது இறந்தார் என்ற சந்தேகத்துக்கு இன்னும் விடை கிடைத்த பாடில்லை. இதனை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையமும், காலநீட்டிப்பு செய்யப்பட்டுவிட்டது. ஒவ்வொரு நாளும் அப்பல்லோ மருத்துவர்கள், ஜெயலலிதா உதவியாளர்கள், சசிகலா சொந்தங்கள் என பிரேக்கிங் நியூஸ்களாக மட்டுமே மாறிப் போய்விட்டன.
இருப்பினும், லோக்சபா தேர்தல் வரையில் கமிஷன் செயல்பாடுகளை உயிர்ப்போடு வைத்திருக்க விரும்புகிறார் எடப்பாடி. இதற்கான காரணங்களைக் கூறும் அதிமுக பொறுப்பாளர்கள், சசிகலா எதிர்ப்பு வாக்குகள் அனைத்தும் ஆளும்கட்சிக்கு வந்து சேரும் என நம்பிக் கொண்டிருக்கிறார் எடப்பாடியார்.
ஜெயலலிதாவைக் கொன்றது சசிகலாதான் என தேர்தல் நெருக்கத்தில் பிரசாரம் செய்யவும், கமிஷனின் அறிக்கை பயன்படும் என நம்புகிறார். அதனால்தான் கமிஷனின் காலஅளவு நீட்டிக்கப்பட்டது.
ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சை முறைகள், மருந்துகள், வைத்தியம் பார்த்த மருத்துவர்கள் என ஒன்றுவிடாமல் விசாரணை நடந்து வருகிறது. இதில் நொந்து போனது டாக்டர்.சிவக்குமார்தான்.
அவரை மையமாக வைத்துத்தான் ஆணையம் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் சொல்கின்றனர்.
ஆனால், ஜெயலலிதா மரணத்தால் அவர் அதிகப்படியான பயத்தில் நாட்களை நகர்த்திக் கொண்டிருப்பதாகவும் குடும்ப கோஷ்டிகள் சொல்கின்றன.
கடைசி நாட்களில் ஜெயலலிதாவுக்குப் பக்கத்தில் இருந்தது அவர்தான். போயஸ் கார்டனில் இருந்து அப்பல்லோவுக்கு ஆம்புலன்ஸில் சென்றதும் அவர்தான். ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட எதிர்பாராத மரணத்தால் மனதளவில் அவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
இதனை சரிக்கட்டுவதற்காக கேரள நம்பூதிரிகளை அழைத்து வந்து அடிக்கடி பூஜைகளையும் செய்து வந்தார். இதனை பிரம்மஹத்தி தோஷம் என்றும் சொல்கிறார்கள். அப்படியொரு பூஜை நடத்தப்பட்டபோது, வந்திருந்த நம்பூதிரிகளில் ஒருவர், ' உன் வீட்டு வாசலில் துக்க நோட்டீஸோடு ஒருவன் வந்திருக்கிறான்' எனக் கூறி ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கிறார்.
இதனை நம்பாமல் வீட்டுக்கு வெளியே வந்திருக்கிறார் டாக்டர். நம்பூதிரி சொன்னது போலவே தூரத்து சொந்தக்காரர் ஒருவர் கேத நோட்டீஸ் (இறப்பு அழைப்பிதழ்) கொண்டு வந்திருக்கிறார். இன்று வரையில் ஜெயலலிதா மரண பாதிப்பில் இருந்து மீள முடியாமல் தத்தளிக்கிறார் சிவக்குமார்' என்கின்றனர் அதிர்ச்சி விலகாமல்.
- அருள் திலீபன்