தினகரன் அணியை விட்டு செந்தில் பாலாஜி தப்பி ஓடும் விவகாரம் வெளியானது அரசியல் அரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செந்தில் பாலாஜி திமுக பக்கம் போவது உறுதியானதில் தினகரன் அணி அதிர்ந்தே போயுள்ளதாம்.
தினகரனைப் பொறுத்தவரை தம்மை நம்பி வந்தவர்கள் மட்டும் செலவு செய்யனும்; தாம் ஒரு பைசா கூட தந்துவிடக் கூடாது என்பதில் படு கறாராம்.
அதுவும் தினகரன் மனைவி அனுராதா கை ஓங்கிய நிலையில் தினகரனிடம் நெருக்கமாக இருந்த அனைவருமே ஒதுங்கிவிட்டனர். அப்படி ஒதுங்கியவர்களில் செந்தில் பாலாஜியை முதல் விக்கெட்டாக வீழ்த்தியிருக்கிறது திமுக.
இது தினகரன் தரப்பை ரொம்பவே அதிர வைத்திருக்கிறதாம். ஜெயலலிதா மறைவுக்கு பின் ஸ்டாலினிடம் நிறைய அதிரடிகளை எதிர்பார்த்து ஏமாந்து போனவர்களுக்கு செந்தில் பாலாஜி விவகாரம் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
இந்த நமட்டு புன்முறுவலுடன் இன்னொரு செய்தியையும் அறிவாலய வட்டாரங்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டன. அதாவது செந்தில் பாலாஜி விவகாரம் இவ்வளவு சீக்கிரமாக லீக் ஆகிவிட்டது; செய்திகள் கசிந்துவிட்டதால் தினகரன், எடப்பாடி தரப்பு மற்றும் பாஜகவினர் நிச்சயம் அவருக்கு குடைச்சலை கொடுக்கவே வாய்ப்பு இருக்கிறது.
அவரை தடுக்க வைக்க பகீரத முயற்சிகளை நிச்சயம் அவர்கள் மேற்கொள்ளவே செய்வார்கள்.. எதிரணி என்ன செய்யப் போகிறது? அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? என்கிற லேசான கவலையும் தங்களுக்கு இருக்கிறது என்கின்றனர்.