மருமகனை மனசாட்சியாக்கும் ஸ்டாலின் - சபரீசனுக்கு ராஜ்யசபா எம்.பி., சீட் ? - EXCLUSIVE
டெல்லி அரசியலை கவனிக்கும் பொறுப்பை கனிமொழியிடம் இருந்து பறித்து மருமகன் சபரீசனிடம் தர இருக்கிறார் ஸ்டாலின்; இதற்காகவே அவரை ராஜ்யசபா எம்.பி.யாக்க திட்டமிடுகிறார் என நாம் பதிவு செய்திருந்தோம். இதை உறுதி செய்யும் வகையில் டெல்லியில் இன்று சோனியா, ராகுல் சந்திப்பின் போது மருமகன் சபரீசனையும் அழைத்துச் சென்றிருக்கிறார் ஸ்டாலின். இது திமுகவில் சீனியர்களை முணுமுணுக்க வைத்துள்ளது. குறிப்பாக அழகிரி அணியை சீற்றம் கொள்ள வைத்திருக்கிறதாம்.
கருணாநிதி காலத்தில் அவரது மனசாட்சியாக டெல்லி அரசியலை முழுமையாக கவனித்து வந்தார் அவரது மருமகன் முரசொலி மாறன். அதனாலேயே கொள்கை முரண்பட்ட பாஜகவுடனும் திமுக ஒரு கட்டத்தில் கை கோர்த்தது.
இதே பாணியை கையில் எடுத்திருக்கிறார் ஸ்டாலின். அதனால்தான் கட்சி விவகாரங்கள் அனைத்தையும் சபரீசனும் அவரது தலைமையிலான டீமும்தான் ஆராய்ந்து ஸ்டாலினுக்கு தகவல்களை கொடுத்து வருகிறது.
இதை வைத்துதான் பாஜக மேலிட பிரதிநிதிகள் பலரும் சபரீசனுடன் நெருக்கமான தொடர்பில் இருந்து வருகின்றனர். இந்த தொடர்புகளால்தான் திமுக- பாஜக கூட்டணி அமையலாம் என்கிற பேச்சுகள் எழுந்தன. ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக இதை மறுக்கும் வகையில் பாஜக எதிர்ப்பு பிரசாரத்தில் தீவிரம் காட்டினார்.
பாஜகவினரைப் போல காங்கிரஸ் மேலிடமும் சபரீசனிடம் நெருக்கமாக இருந்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் சபரீசனும் நல்ல தொடர்பிலேயே இருந்து வருகின்றனர். இதன் அடுத்த கட்டமாகவே சபரீசனை லோக்சபா தேர்தலுக்குப் பின் ராஜ்யசபா எம்.பி.யாக்குவது என்பது ஸ்டாலினின் திட்டமாக இருக்கிறது.
தற்போது டெல்லி விவகாரங்களை கவனித்து வரும் கனிமொழிக்கு இனி முக்கியத்துவம் படிப்படியாக குறையும். இதை அனைத்தையும் உறுதி செய்யும் வகையில் ஸ்டாலின் தமது டெல்லி பயணத்தில் சபரீசனையும் இணைத்துக் கொண்டார்.
சோனியா, ராகுல் சந்திப்புகளில் சபரீசனும் உடன் இருந்தார். இது திமுகவின் சில சீனியர் தலைவர்களிடையே முணுமுணுப்பை ஏற்படுத்தியுள்ளது. மு.க. அழகிரி தரப்பும் இதை கடும் கோபத்துடன் பார்த்து வருகிறது.
சபரீசனை முன்வைத்து ஸ்டாலினுக்கு எதிரான அடுத்த ஆட்டத்தை தொடங்குவார் அழகிரி என்கின்றன மதுரை வட்டாரங்கள்.
-எழில் பிரதீபன்