திமுகவில் தமக்கான இடம் இனி இல்லை என்கிற அதிருப்தியில் ஸ்டாலின் - கனிமொழி இடையே சிண்டு முடியும் வேலையில் படுதீவிரமாக இறங்கியுள்ளனராம் மாறன் சகோதரர்கள்.
டெல்லியில் கட்சித் தலைவர்களை சந்திப்பதற்கான ஏற்பாடு செய்வதற்கு தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்டோரை கருணாநிதி பயன்படுத்தி வந்தார். அண்மைக்காலமாக இந்த பணி முழுமையாக ஸ்டாலின் மருமகன் சபரீசன் கைக்கு போய்விட்டது.
சபரீசனைப் பொறுத்தவரையில் பிற மாநில கட்சித் தலைவர்களுடன் மிக நெருக்கமான தொடர்பில் இருந்து வருகிறார். நாள்தோறும் உரையாடும் வகையில் இந்த நெருக்கம் இருக்கிறது.
அண்மையில் ஸ்டாலின் டெல்லி சென்ற பயணம் முழுவதுமே சபரீசனின் திட்டமிடல், ஒருங்கிணைப்பில்தான் நடைபெற்றது. இதனால் தயாநிதி மாறனை டெல்லி செல்லும் போது ‘கழற்றிவிட்டார்’ ஸ்டாலின்.
ஆனால் தயாநிதி தரப்போ, தமது பிஏ கவுதமின் மகள் திருமணத்துக்காக தாம் டெல்லி செல்லவில்லை என ஒரு கதையை கூறி வருகிறது. தயாநிதி மாறன் டெல்லியில் கோலோச்சிய காலத்தில் திமுகவுக்கு ஒரு அலுவலகம் கூட அங்கே இல்லை.
இப்போது சபரீசனின் முன்முயற்சியால் திமுகவுக்கு அலுவலகம் உருவாகிறது. இதனால் இனி டெல்லி விஷயங்கள் அனைத்தும் சபரீசன் கையில்தான் என்பது உறுதியாகிவிட்டது.
இப்படி சபரீசனால் தமது அத்தியாயத்துக்கு திமுகவில் முடிவுரை எழுதப்படுவதை தயாநிதி தரப்பால் சகிக்க முடியவில்லை. இந்த கோபத்தில் சபரீசன் குறித்து ஏகப்பட்ட தகவல்களை தங்களுக்கான மீடியாக்கள் மூலம் தயாநிதி தரப்பு பரப்பிக் கொண்டிருக்கிறது.
மேலும் கனிமொழி தரப்பை தொடர்பு கொண்டு ஸ்டாலின்-சபரீசனுக்கு எதிராக தூண்டி விடும் ‘குட்டி கலாட்டா’ வேலையிலும் மாறன் சகோதரர்கள் படுதீவிரமாக இருக்கின்றனராம். ஆனால் கனிமொழி தரப்பு இதற்கு பிடிகொடுக்காமல் இந்த முயற்சிகளை ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றுவிட்டாரம்.