செந்தில் பாலாஜியே செட்டப் தானா? எடப்பாடிக்கு எதிராக ஸ்டாலின் - தினகரன் ரகசிய திட்டம்?

MKStalin - Dinakaran secret project against Edappadi

Dec 20, 2018, 10:31 AM IST

தினகரனின் அமமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்துவிட்டார். கரூர் மாவட்டத்திலும் கட்சிப் பணிகளை கவனிக்கத் தொடங்கிவிட்டார்.

எடப்பாடியை ஓரம்கட்ட ஸ்டாலினுடன் சேர்ந்து தினகரன் நடத்திய சதித்திட்டமோ என சந்தேகப்படத் தோன்றுகிறது என்கிறார்கள் அமமுகவினர்.

திமுகவில் செந்தில் பாலாஜி சேரச் சென்ற சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டார் தினகரன்.

அந்த அறிக்கையில், “சிலர் சுயநலத்துக்காக தலைமையை விட்டு விலகுவதும் மன்னிப்புக் கோரி இணைவதும் இயல்பான ஒன்றே. துரோகிகளும், விரோதிகளும் அமமுகவின் வளர்ச்சியைத் தடுக்க முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யார் வருந்தப் போகிறார்கள்?

அமமுகவில் இருந்து சில நபர்களோ, குழுவோ சுயநலனுக்காக விலகிச் செல்வதால் கட்சியே முடங்கிவிடும் என்று நினைப்பது பூனை கண் மூடினால் உலகம் இருண்டுவிடும் என்பது போன்றது. அமமுகவை சீண்டிப்பார்ப்பது உயர் அழுத்த மின்சாரத்தை தொட்டு பார்ப்பதற்கு சமம். நெல்மணிகளோடு சில களைகளும் சேர்ந்து வளர்ந்து விடுவது வழக்கமானது. ஒரு சிறு குழு விலகிச் செல்வதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது. ஆல விருட்சத்தின் இலைகள் உதிர்வதால் விருட்சம் இல்லாமல் போய்விடுமா?” என தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையின் எந்த இடத்திலும் செந்தில் பாலாஜி பெயரை தினகரன் குறிப்பிடவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பேட்டியளித்த செந்தில் பாலாஜியும், தினகரனை விமர்சிப்பது மரபாக இருக்காது என ஒதுங்கிக் கொண்டார்.

அவரும் தினகரனை விமர்சிக்கவில்லை என்பதை கோடிட்டுக் காட்டிய அமமுக பொறுப்பாளர்கள், தினகரனும் ஸ்டாலினும் தனியார் ஓட்டல் ஒன்றில் சந்தித்துப் பேசியதாக அதிமுக தரப்பில் இருந்து தகவல் கிளம்பியது.

'அந்த ஓட்டலில் பல ஆண்டுகளாக தங்குகிறேன்' என தினகரனும் 'ஒரே ஓட்டலில் தங்குவது என்ன தவறு' என துரைமுருகனும் விளக்கம் கொடுத்தனர். இந்த சந்திப்புக்குப் பிறகே பல விஷயங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளனவாம்.

தேர்தல் களம் என்பது எடப்பாடிக்கும் ஸ்டாலினுக்கும் என இருக்கும் நிலையை மாற்றி, தினகரன்-ஸ்டாலின் என்பதைப் போன்ற தோற்றம் இதன்மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அப்படிச் செய்வதால் ஆளும்கட்சியை ஒரேயடியாக ஓரம்கட்ட முடியும் என தினகரன் கணக்குப் போட்டாராம்.

சென்னை அடையாறில் உள்ள பிரம்ம ஞான சபை வளாகத்தில் அடிக்கடி வாக்கிங் போகின்றனர் தினகரனும் ஸ்டாலினும். இது இயல்பானதுதான் எனக் கூறிக் கொண்டாலும், திரைமறைவில் சில காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

செந்தில் பாலாஜி வருகையை ஏதோ எம்.ஜி.ஆரே மீண்டும் வந்துவிட்டதைப் போல வெளிக்காட்டியது திமுக. இதில் ஆளும்கட்சிக்குத்தான் சோதனை எனத் தகவல்களும் வெளியானது. அதிமுகவை டம்மியாக்கிவிட்டு, தானே களத்தில் இருப்பதைப்போன்ற சூழலை உருவாக்கப் பார்க்கிறார் தினகரன். செந்தில் பாலாஜி செல்வது அந்த அடிப்படையில்தான். தினகரனோடு அவருக்கு என்னதான் பிரச்னை என்ற உண்மைத்தகவல், அரசல்புரசலாகக்கூட இதுவரையில் வெளியில் வரவில்லை என்பதையும் முக்கியமானதாகப் பார்க்கலாம் என அதிர்ச்சி கொடுக்கின்றனர்.

-அருள் திலீபன்

You'r reading செந்தில் பாலாஜியே செட்டப் தானா? எடப்பாடிக்கு எதிராக ஸ்டாலின் - தினகரன் ரகசிய திட்டம்? Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை