தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் பணியாளர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள பயன்படுத்துவதற்கான ஃபேஸ்புக்கின் தொடர்பு வசதி ஒர்க்பிளேஸ் (Workplace) ஆகும். மைக்ரோசாஃப்ட் டீம்ஸ், ஸ்லக் ஆகியவை மற்ற நிறுவனங்கள் வழங்கும் நிறுவனங்களுக்கான தொடர்பு வசதிகளாகும். ஃபேஸ்புக்கின் ஒர்க்பிளேஸ் லண்டனை மையமாகக் கொண்டு இயங்குகிறது.
வால்மார்ட், ஸ்டார்பக்ஸ், ஸ்போட்டிஃபை, ரிலையன்ஸ் குரூப் போன்றவை உள்ளிட்ட 30,000க்கும் மேற்பட்ட பெருநிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்குள்ளான தொடர்புக்கு ஒர்க்பிளேஸையே பயன்படுத்துகின்றன.
ஃபேஸ்புக்கின் ஒர்க்பிளேஸ் பிரிவுக்கு கரண்தீப் ஆனந்த் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கரண்தீப் ஆனந்த், ஹைதராபாத்திலுள்ள சர்வதேச தகவல் தொழில்நுட்ப கழகத்தில் (International Institute of Information Technology) பயின்றவராவார். கெல்லாக் நிறுவனத்தில் மேலாண்மையும் படித்துள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த கரண்தீப் ஆனந்த், அதற்கு முன்பு 15 ஆண்டுகள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். டெவலப்பர்கள், எஞ்ஜினியர்கள், தரவு ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் அடங்கிய ஒர்க்பிளேஸ் குழுவுக்கு கரண்தீப் தலைமையேற்க இருக்கிறார்.
ஃபேஸ்புக் 2016ம் ஆண்டு முதல் ஒர்க்பிளேஸ் வசதியை அளித்து வருகிறது. உடன்பணியாளர் அல்லது பணியாளர் குழுவினரோடு காணொளி காட்சி உரையாடல், ஸ்கிரீன் மற்றும் பைல் என்னும் கோப்புகளை (screen sharing and file sharing) பகிர்ந்து கொள்ள இது உதவுகிறது.