உ.பி.யில் மாயாவதி - அகிலேஷ் கூட்டணி-காங்கிரசுக்கு பெப்பே!

Congress shock Mayawati - Akhilesh alliance in UP

by Mathivanan, Dec 20, 2018, 10:02 AM IST

வரும் லோக்சபா தேர்தலில் உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என முடிவாகியுள்ளது. காங்கிரஸ் அம்போ என கைவிடப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிக (80) எம்.பி. இடங்களை கொண்டுள்ள மாநிலம் உ.பி., இங்கு அதிக இடங்களை கைப்பற்றும் கட்சியே மத்தியில் ஆட்சியமைக்கும் என்பது நிதர்சனம்.

கடந்த 2014 பொதுத் தேர்தலில் பா.ஜ.க. 73 எம்.பி. இடங்களை அள்ளியது. வரும் தேர்தலில் பா.ஜ.வை வீழ்த்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் - அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணி அமையும் என பெரிதும் எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் காங்கிரசுக்கு உ.பி.யில் போதிய செல்வாக்கு இல்லாத நிலையில் அக்கட்சிக்கு 10-க்கும் குறைவான இடங்களை ஒதுக்கினாலும் வேஸ்ட் என இரு கட்சிகளும் முடிவு செய்து விட்டன. இதனால் காங்கிரசை கழற்றி விட முடிவு செய்து அஜீத் சிங்கின் ராஷ்டிரிய லோக்தள் கட்சிக்கு ஓரிரு தொகுதிகளை ஒதுக்கிவிட்டு இரு கட்சிகளும் சம அளவிலான தொகுதிகளில் போட்டியிடுவது என உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அமேதி, சோனியாவின் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தாமல் ஆதரவு தருவது என்றும் முடிவாகியுள்ளதாம். கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாயாவதியின் பிறந்த நாளான வரும் ஜன.15-ம் தேதி வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கூட்டணியில் காங்கிரசை புறக்கணித்ததற்கு நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தான் காரணமாம். ராஜஸ்தான் மற்றும் ம.பி.யில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளை கூட்டணியில் சேர்க்காமல் காங். தனித்துப் போட்டியிட்டதற்கு பழி தீர்க்கும் வகையில் இரு கட்சிகளும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

மேலும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தவும் மாயாவதி, அகிலேசுக்கு விருப்பமில்லையாம். தேர்தலுக்கு பின் பிரதமர் பதவிக்கான போட்டியில் குதிக்க மாயாவதியும் விரும்புகிறாராம்.

உ.பி.யில் இரு கட்சிகளிடையே கூட்டணி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதை காங்கிரஸ் மறுத்துள்ளது. கூட்டணி குறித்து இன்னமும் பேச்சு நடந்து வருகிறது. இறுதி முடிவு எட்டப்படவில்லை. கூட்டணியில் சேர்த்தாலும், சேர்க்காவிட்டாலும் காங்கிரசுக்கு சம்மதம் தான் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.

You'r reading உ.பி.யில் மாயாவதி - அகிலேஷ் கூட்டணி-காங்கிரசுக்கு பெப்பே! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை