மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் வரும் மார்ச் மாதம் திறக்கப்படும் என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் 50 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் கட்ட தடைவிதிக்கக்கோரி தேசிய மக்கள் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவின் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. சிறைத் தண்டனை பெற்ற அவருக்கு ரூ.50 கோடி செலவில் மெரினாவில் நினைவிடம் கட்ட அரசு முடிவு செய்து அதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளது. தண்டனை பெற்ற ஒருவருக்கு அரசு பணத்தில் அதாவது மக்களின் வரிப் பணத்தில் நினைவிடம் கட்டக்கூடாது. இவ்வாறு நினைவிடம் அமைப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும். இதனால், மெரினாவில் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்ட தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயலலிதாவிற்கு சட்டவிதிகளுக்கு உட்பட்டு நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. வரும் மார்ச் மாதம் மெரினாவில் ஜெயலலிதாவிற்கான நினைவிடம் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.