தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் எந்த நேரத்திலும் நீக்கப்படலாம் என்கின்றன கதர்ச்சட்டை வட்டாரங்கள்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் இந்த கூட்டணிக்கு முன் நிபந்தனையாக திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்தது திமுக.
தினகரன், சசிகலா, ரஜினி என திமுகவுக்கு எதிரான அனைவருடனும் நெருக்கம் காட்டுகிறவர் திருநாவுக்கரசர். அவரை நம்பிக்கையான ஒரு தலைவராக திமுக பார்க்கவில்லை.
அத்துடன் தினகரனுடன் கூட்டணி அமைக்க முயற்சித்து ராகுலிடமும் பேச வைத்தார் திருநாவுக்கரசர். ஆனால் சோனியா, ராகுல் இருவருமே திமுக கூட்டணிதான் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.
இதனால் திருநாவுக்கரசர் மீது கடுமையான அதிருப்தியில் திமுக தலைமை இருந்தது. இதனை சோனியா, ராகுலிடமும் திமுக தரப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் திருநாவுக்கரசரிடம் ராஜினாமா கடிதத்தை டெல்லி மேலிடம் வாங்கி வைத்துவிட்டதாக கதர்ச்சட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் திருநாவுக்கரசர் நாளை அமெரிக்கா செல்கிறார். ஜனவரி 6-ந் தேதிதான் தமிழகம் திரும்புகிறார்.
லோக்சபா தேர்தல் நேரத்தில் திருநாவுக்கரசர் வெளிநாடு செல்வதும் சர்ச்சையாகி உள்ளது. மேலும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கூட்டம் இன்று ப.சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு திருநாவுக்கரசர் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-எழில் பிரதீபன்