இந்தியாவில் உணவு பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த தவறான, மோசம்போக்கும் சமூக ஊடக பதிவுகள் உணவு பாதுகாப்புக்கு பொறுப்பான அமைப்புகள் மீது பொது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்கும். ஆகவே அவற்றை அகற்ற வேண்டும் என்று கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களை இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.பொய்ச் செய்திகள் மற்றும் ஒளிப்பதிவு துணுக்குகளை உடனடியாக அகற்றுவதோடு, அவற்றை பதிவேற்றம் செய்யும் பயனர் கணக்குகளை முடக்க வேண்டும் என்று இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது.
மெலமைன் என்னும் வேதிப்பொருள் பாலில் கலந்திருப்பதாகவும் அது கலந்திருக்கும் பாலுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு அமைப்பு அனுமதி அளித்திருப்பதாகவும் பிளாஸ்டிக் முட்டை மற்றும் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாகவும் போலி செய்திகள் மற்றும் ஒளிப்பதிவுகள் முகநூல் மற்றும் கூகுள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
தங்கள் கடமைகளிலிருந்து வழுவாமல் பொறுப்புணர்வோடு செயல்படும் கட்டுப்பாடு நிறுவனங்களின் நம்பகத்தன்மையை இந்தப் பொய்ச் செய்திகள் குலைக்கின்றன என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு (FSSAI) அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பவண் அகர்வால், இந்திய தகவல்தொடர்பு அமைச்சகத்தின் செயலர் அஜய் பிரகாஷ் சௌவ்ஹானியிடம் புகார் செய்ததையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தவறான செய்திகள் குறித்து உடனடியாக புகார் செய்யவும், நடவடிக்கை எடுக்கப்படும்படியாகவும் சமூக ஊடக நிறுவனங்கள் பிரத்யேக அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு அமைப்பு யோசனை தெரிவித்துள்ளது.